ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினம் வரும். முழு பிரகாசத்துடன் ஒளி வீசும் சந்திர பகவானை தரிப்பதன் மூலமும், அவருக்கு ஒளி தரக்கூடிய சூரியனை வழிபட்டும் அருள் பெறலாம். பௌர்ணமி என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது நில ஒளியின் பிரகாசம் தான். இந்த பௌர்ணமி நாளில் நாம் செய்யும் ஒவ்வொரு பூஜையும் மிகவும் விசேஷமானது. செல்வம் சம்பந்தமான பூஜைகளாக இருக்கட்டும், ஆரோக்கியம் சம்பந்தமான பூஜைகளாக இருக்கட்டும் இந்த நாளில் செய்வது அதிக பலனை கொடுக்கும். இந்த நன்னாளில் செய்யும் சித்ரகுப்தர் வழிபாடு, சந்திரன் வழிபாடு உங்களுடைய வாழ்வில் செழிப்பையும் ஆசியையும் தரும். பௌர்ணமி தினங்களுக்கு என்று தனி சிறப்பும் பரிகாரங்களும் உள்ளன. அந்தவகையில் இந்த ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றி இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

ஐப்பசி மாத பௌர்ணமியின் சிறப்புகள்
ஐப்பசி மாதப் பவுர்ணமி தினத்துக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுகிறான். ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தின்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் தோன்றுவான். ஐப்பசி மாதத்தின் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் இந்தத் திருநாளில், சுத்தமான அன்னத்தினைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். பௌர்ணமி நாளில் வரும் அன்னாபிஷேக வைபவத்தில் கலந்து கொண்டால் பசித்த வேளைக்கு உணவு தேடி வரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்ல சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்ட தினம் ஐப்பசி மாத பௌர்ணமி. அதனால்தான் சிவபெருமானுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் செய்விக்கப்படுகிறது.
மகாலட்சுமி அருள் கிடைக்க
செல்வம் சேர மகாலட்சுமி வழிபாடு மிக அவசியமானது. மகாலட்சுமியின் அருட்பார்வை ஒருவர் மீது விழுந்து விட்டால் அவருக்குச் செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது. வருகிற ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்வதன் மூலம் சுக்கிர பகவான் மற்றும் மகாலட்சுமி தாயாரின் அருளை பெற முடியும். மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை பெற பௌர்ணமி தினத்தன்று வீடு முழுவதையும் சுத்தம் செய்து, பூஜை அறையை வாசனை மிக்க மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். ஏனென்றால் வாசனை மிக்க இடங்களில் மகாலட்சுமி குடியிருப்பாள் என்பது ஐதீகம்.

பரிகாரம் செய்யும் முறை
இந்த பரிகாரம் செய்வதற்கு கண்ணாடி பாத்திரம் அல்லது செம்பு பாத்திரம் ஒன்றனை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 7 ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து விடுங்கள். இந்த நாணயங்களை வெள்ளை சர்க்கரையினால் மூடி விடுங்கள். அதன்பிறகு சர்க்கரையின் மேல் 7 கிராம்பினை வைத்து விடுங்கள். இதனுடன் நாம் வீட்டில் தினமும் பயன்படுத்தும் 7 கற்பூரங்களையும் வைத்து விடுங்கள். இதனை எடுத்து உங்கள் பூஜை அறையில் பௌர்ணமி தினத்தன்று வைத்து விடுங்கள்.
இந்த பரிகாரத்தை செய்யும் போது நீங்கள் என்னவெல்லாம் வேண்டிக் கொண்டு செய்கிறீர்களோ அவை எல்லாம் ஒவ்வொன்றாக கிடைக்க ஆரம்பிக்கும். குறிப்பாக வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் எல்லாம் நீங்கி, பண வசியம் சேர ஆரம்பிக்கும். இந்த பரிகாரத்தை நாம் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் செய்ய வேண்டும். இதில் இருக்கும் 7 ஒரு ரூபாய் நாணயங்களை நாம் ஏதாவது சுபச் செலவுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். கிராம்பினை எடுத்து உங்கள் பர்சினில் வைத்துக் கொண்டால் வீண்விரயம் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். இந்த பரிகாரத்தை சனிக்கிழமை மாலை 6:00 மணி முதல் 10 மணிக்குள் செய்து முடிக்க வேண்டும்.
இதனையும் படியுங்கள் : குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுவரா நீங்கள் ? குரு தோஷம் நீங்க எளிய பரிகாரம்!
இந்த பரிகாரம் தவிர்த்து மனதார சந்திர பகவானிடம் வேண்டி முக்கியமாக, ஐப்பசி பெளர்ணமி தினத்தன்று இயலாதவர்களுக்கு தயிர் சாதம் அல்லது எலுமிச்சை சாதம் அன்னதானமாக வழங்கினால் வீட்டில் இதுவரை இருந்த தரித்திர நிலை மாறும்.


