சிவனின் ருத்ர அம்சமாக தோன்றிய ரூபமே கால பைரவர் ரூபமாகும். அந்தகாசுரன் என்ற அசுரனை வதம் செய்வதற்காக சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து அவதரித்தவர் பைவர். இவர் பொதுவாக நான்கு திருக்கரங்களுடன் காணப்படுவார். சில இடங்களில் அரிதாக 14 மற்றும் 32 திருக்கரங்களுடன் காட்சி தருவார். எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.

பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. பொதுவாக பைரவர் நீலமேனி கொண்டவராய், சிலம்புகள் அணிந்த திருவடியைக் கொண்டவராய், பாம்புகள் பொருந்திய திருவரையும் மண்டை ஓட்டு மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், பாசம், உடுக்கை, மழு முதலியன தாங்கிய திருக்கரங்களை உடையவராய் கூறப்பட்டாலும் அஷ்டபைரவர் வடிவங்களாகக் கூறும்போது அவரின் வண்ணம் ஆயுதம், வாகனம் இவை மாறுபட்டுக் காணப்படும். இவரை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
பைரவர் வழிபடுவது ஏன்?
கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள். அதுவே அவர்களின் நல்ல பார்வையால் சிலர் எதிர்பாராத நன்மைகளையும், புகழையும் அடைகிறார்கள். பைரவர் பூசை செய்வதனால் கடுமையான தோஷங்களும் நீங்கும் என்று பைரவர் வழிபாட்டில் சொல்லப்பட்டுள்ளன. பைரவரின் மந்திரங்களை துதித்து வந்தால் உங்கள் துன்பங்கள் யாவும் ஓடி, இன்பங்கள் எல்லாம் தேடி வரும் என நம்பப்படுகிறது.
பைரவாஷ்டமி வழிபாடு
காலபைரவாஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமியரும் அஷ்ட பைரவரை வணங்குவதாக ஐதிகம். இந்த நாளில் சொர்ண கமலரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது. ஸ்ரீபகவத்பாதாள் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பைரவ வழிபாடு தொன்மையான பிணி தீர்க்கும் வழிபாடு. மேலும் கடன் பிரச்னைகளை நீக்கி செல்வவளம் தரும் நாளாகவும் உள்ளது. ராகு – கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர். நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர். இவரை வணங்க சகல அச்சங்களும் நீங்கும்.
பஞ்ச தீப எண்ணெய் வழிபாடு

அனைத்து சிவன் கோவில்களிலும் கால பைரவர் அல்லது பைரவர் சன்னதி நிச்சயம் அமைந்திருக்கும். சிவன் கோவிலுக்கு சென்று பைரவருக்கு பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத கடன் தொல்லைகள் நீங்கும். இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் பஞ்ச தீப எண்ணெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
வறுமை நீங்க பைரவர் வழிபாடு
சித்திரை பரணி, ஐப்பசி பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். எனவே அந்த நாளில் வறுமை நீங்கி வளம் பெருக கால பைரவருக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும். அதுமட்டுமல்லாமல் அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி வழிபட கடன் பிரச்சினை நீங்கும். பயம் அகலும் எதிரிகள் தொல்லை நீங்கும். பைரவருக்கு வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அர்ச்சனை செய்து வணங்கினால் கடன் பிரச்சினைகள் நீங்கும்.
பைரவரை வழிபடும் முறை
கால பைரவருக்கு செளமுக விளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் உகந்ததாகும். செளமுக விளக்கு என்பது நான்கு புறமும் தீபம் கொண்ட விளக்காகும். இதில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். உளுந்த வடை, தயிர் சாதம் ஆகியவற்றை கால பைரவருக்கு நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். பைரவ மூர்த்தங்களுக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வது ரொம்பவே விசேஷமானது. பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்வதால் வழக்கு முதலான சிக்கல்கள் நிவர்த்தியாக்கும் என்பது ஐதீகம்.
பைரவ வழிபாட்டால் எற்படும் நன்மைகள்
கண்ணுக்குத் தெரிகிற எதிரிகளையும் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் பலமிழக்கச் செய்து நம்மை வாழவைத்து அருளுவார் காலபைரவர். முன் ஜென்ம வினைகளின் வீரியத்தைக் குறைத்து, பாவங்களையெல்லாம் போக்கி அருளுவார். பக்கத்துணையாக இருப்பார் பைரவர் என்று நம்பப்படுகிறது. பைரவரை வழிபடுவதால் நம்மைச் சுற்றியுள்ள துர்குணங்களும் தீய சக்திகளும் விலகும். மேலும், கால பைரவரை பக்தியுடன் வழிபடுவதால் வழக்குகள் கூட சாதகம் ஆகும். முக்கியமாக செய்வினை கோளாறுகள் அகலும்.
இதனையும் படியுங்கள் : தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை





