நமது பாவங்களையும், பிரச்னைகளையும் தீர்க்கக்கூடிய ஒரே சக்தி இறைவனுக்கு மட்டுமே உண்டு. ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என சொல்வார்கள். ஆம், கடவுள் இல்லாத இடத்தில் நமக்கு பாதுகாப்பு இல்லை என்பது அதன் பொருள். அதுபோலவே, அர்ச்சனை என்பது கோயில்களில் இறைவனை வழிபடும் முறைகளில் ஒன்று. கோவிலில் வழக்கமாக அர்ச்சனை நடைபெறுவதை பார்த்திருக்கிறோம். அர்ச்சகர் பூஜை செய்யும் போது இறைவனின் பல்வேறு திருநாமங்களை சொல்லி அர்ச்சனை செய்வார். பொதுவாக நாம் அர்ச்சனை செய்ய நம்முடைய பெயர், நம்முடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என சொல்லி அர்ச்சனை செய்வார். ஆனால் சுவாமி பெயருக்கு நாம் அர்ச்சனை செய்வது சரியானது தானா என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அர்ச்சனை என்பது யாது?
“அர்ச்சனை” என்ற சொல், “அர்ச்சா” என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து வந்தது, இதன் பொருள் சிலை அல்லது உருவம். சிலை அல்லது உருவத்தில் உள்ள கடவுளை வழிபடுவதே அர்ச்சனை ஆகும். கோயில்களில் செய்யப்படும் அர்ச்சனை, கடவுளிடம் தங்கள் வேண்டுதல்களை சமர்ப்பிக்கும் ஒரு வழியாகும். இதன் மூலம், கடவுளின் அருளைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது. இதில் அர்ச்சகர் கடவுளின் திருநாமங்களைச் சொல்லி, மந்திரங்களை உச்சரித்து, மலர்கள் மற்றும் பிற பொருட்களை கடவுளுக்கு சமர்ப்பித்து கடவுளை மகிழ்விக்கும் ஒரு செயல் என்று கருதப்படுகிறது. நமக்கு மந்திரங்கள் தெரியாத காரணத்தினாலே, அந்த அர்ச்சகர் நமக்காக நம் பொருட்டு அந்த மந்திரங்களைச் சொல்லி சமர்ப்பிக்கிறார்.
கோவிலில் அர்ச்சனை செய்வது ஏன்?
அர்ச்சனை செய்வதன் முக்கிய நோக்கம், தெய்வத்தின் முன் நமது பிரார்த்தனைகள், குறைகள், பிரச்சனைகள் ஆகியவற்றை சொல்லி அவை தீர வழிபாடு செய்வது தான். பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வதன் மூலம் கடவுளிடம் நாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளலாம் என நம்பப்படுகிறது. ஒருவர் கோத்திரத்தைச் சொல்லும் போது அது அவரது பரம்பரையைக் குறிக்கிறது. அவர் பிறந்த நட்சத்திரத்தையும், பெயரையும் சொல்லும் போது அவருக்கென தனி அடையாளத்தைக் கொடுக்கிறது. இதனால் அவர்கள் தனது கோரிக்கைகளை இறைவனிடம் தனிப்பட்ட முறையில் சொல்லி பலன் பெறுகின்றனர். கோயிலில் அர்ச்சனை செய்வது என்பது வீட்டில் பூஜை செய்வதைக் காட்டிலும் சக்தி பெற்றது. அதனால் தான் மக்கள் தாங்கள் விரும்பியதை பெற கோவிலில் அர்ச்சனை செய்கிறார்கள்.
கோவிலில் சாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?
கோவிலில் அர்ச்சனை செய்யும் போது, சாமி பெயருக்கு அர்ச்சனை செய்வதை சிலர் வழக்கமாக செய்து வருகிறார்கள். ஆனால், பரம்பரியமாகவும் ஆன்மிக நூல்களிலும் “நம்முடைய பெயருக்கும், கோத்திரம், நட்சத்திரம், ராசி” ஆகியவற்றுக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அர்ச்சனை என்பது நம்முடைய குறைகள், பிரார்த்தனைகள், ஆசைகள் ஆகியவற்றை கடவுளிடம் நேரடியாக கூறும் ஒரு முறையாகும். கடவுள் தனக்குத் தேவையான எதையும் கேட்பதில்லை, நாம் தான் இந்த பிறவியில் உள்ள குறைகள், பிரச்சனைகளை தீர வேண்டும், கடவுளின் அருள் பெற வேண்டும் என்பதற்காக கோவிலில் நம் பெயரை சொல்லி அர்ச்சனை செய்கிறோம். அதுமட்டுமல்லாமல் அர்ச்சனை செய்யும் போது சொல்லப்படும் மந்திரங்களில் பாப பீட பரிகாரம் என்பது “மனிதனைப்” பற்றியது. அதனால், சாமி பெயருக்கு அர்ச்சனை செய்வது அர்த்தமற்றதாகும், நம் பெயருக்கே அர்ச்சனை செய்ய வேண்டும்.
இதனையும் படியுங்கள் : விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை எப்படி வழிபட்டால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்!!


