இந்துக்களின் வழிபாட்டு முறைகளின் படி வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உண்டு. வியாழக்கிழமை என்பது மங்களகாரகன் என சொல்லப்படும் குரு பகவானுக்கு உரிய நாளாக சொல்லப்படுகிறது. இவர் ஞானத்தை வழங்கக் கூடியவர். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற வாழ்வின் அடிப்படையான விஷயங்களுக்கு காரணமானவர் என்பதால் குரு பகவானை ஏராளமானவர்கள் வழிபடுவது உண்டு. குருவின் அருள் இருந்தால் அவ்வளவு நன்மைகள் கிடைக்கும். அப்படி குருவின் அருளை பெறுவதற்கு அவருக்குரிய வியாழக்கிழமையில் நாம் தானம் செய்ய வேண்டிய பொருட்களைப் பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

வியாழன் வழிபாடு
இந்து மதத்தின் படி வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நவகிரக பெயராலேயே குறிப்பிடப்படுகின்றன. அதில் வியாழக்கிழமை மகாவிஷ்ணுவிற்கு உரிய நாளாகவும், குரு பகவானுக்கு உரிய நாளாகவும் கருதப்படுகிறது. இதனாலேயே வியாழக்கிழமையை குருவாரம் என குறிப்பிடுவதுண்டு. குரு என்பவர் தெய்வத்திற்கும் மேலானவர். அதனால் அவருடைய அருளை பரிபூரணமாக நாம் பெற வேண்டும்.
வியாழக்கிழமையின் சிறப்புகள்
தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்கக்கூடிய குரு பகவானை வணங்க கூடிய கிழமை வியாழக்கிழமை. வியாழன் என்பவரே குரு பகவானைக் குறிக்கும். வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. குரு அருள் நிறைந்திருக்கக் கூடிய நாள் வியாழக்கிழமை. கல்வி உட்பட பல கலைகளை கற்றுக் கொள்வதற்காக, அதனை தொடங்குவதற்கான அற்புத நாள். இந்த நாளில் கலைகளை கற்றுக் கொள்ளத் தொடங்க குருவின் அருளால் சிறப்பாக கற்றுத் தேர முடியும். இந்த மங்களகரமான நாளில் சில குறிப்பிட்ட 5 பொருட்களை தானமாக அளிப்பதால் குருவின் அருளை பெற முடியும் என ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.
வியாழக்கிழமையில் தானம் கொடுக்க வேண்டிய பொருட்கள்
மஞ்சள் நிற மலர்கள்
இதுவரை எத்தனையோ வகையான தானத்தை செய்திருப்பீர்கள். ஆனால் மலர்களை தானமாக அளித்ததுண்டா? ஆம் மலர்களையும் நாம் தானமாக அளிக்கலாம். அதிலும் வியாழக்கிழமை அன்று நாம் மஞ்சள் நிற மலர்களை தானம் செய்தால், பிறரை மதிக்காததால் நமக்கு ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் தீரும். மஞ்சள் மங்களகரமான நிறம் என்பதால் இதனை தானம் செய்யும் போது நமக்கு அதிர்ஷ்டம் ஏற்படும் அதுமட்டுமல்லாமல் நம்முடைய வாழ்க்கை பிரகாசமாக மாறிவிடும்.
மஞ்சள்
பெண்கள் கையால் செய்யக்கூடிய காரியம் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை. பெண்கள் தங்களின் கையால் சில பொருட்களை தானமாக கொடுத்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். அதில் ஒன்று தான் இந்த மஞ்சள். இந்த மஞ்சளை தானமாக தருவதன் மூலம் நம்முடைய வீட்டில் செல்வ வளம் பெருகும். இது எதிர்மறை ஆற்றல்களை அழித்து, ஆரோக்கியம் மற்றும் அதிர்ஷ்டத்தை தரும்.
குங்குமப் பூ
வியாழக்கிழமைகளில் குங்குமப்பூவை தானமாக அளிப்பதால் ஞானம் பெருகும். செந்தூர நிற கயிறுகள், செந்தூர பொடி ஆகியவற்றையும் கோவிலுக்கு தானமாக கொடுக்கலாம். ஆன்மிக தலைவர்கள், ஆசிரமங்கள் ஆகியவற்றிற்கும் தானமாக கொடுப்பதால் உறவில் இனிமை ஏற்படும், செல்வ ஈர்ப்பு ஏற்படும்.
மஞ்சள் நிற பழங்கள்

மஞ்சள் நிறத்தில் இருக்கக் கூடிய வாழைப்பழங்கள், எலுமிச்சை போன்ற பழங்களை வியாழக்கிழமை தானமாக அளிக்கலாம். இப்படி நாம் செய்யும் போது நாம் தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும். அதுவும் குரு பகவானுக்கு உரிய நாளில் நாம் பழங்களை தானம் அளிப்பதால் நமக்கு புத்தியும், சித்தியும் கிடைக்கும்.
கல்விக்குரிய பொருட்கள்
வியாழக்கிழமை ஞானம், அறிவு ஆகியவை பெருகுவதற்கான நாளாகும். அதனால் இந்த நாளில் படிப்பிற்கு தேவையான பொருட்களை வாங்கி நாம் தானம் அளிக்கலாம். இதனால் குழந்தைகள் படிப்பு, வேலை, பதவி உயர்வு தொடர்பான வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். அதுமட்டுமல்லாமல் வேலை மற்றும் தொழிலில் இருக்கும் தடைகளை நீக்கி, சொத்து சேர்க்கையை அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : பசு மாட்டிற்கு இந்த 1 பொருளை தானம் கொடுத்தால் லட்சக்கான கடனும் தீரும்!




