ஒரு சிலருக்கு கறியை விட மீன் மற்றும் கருவாட்டின் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி கருவாட்டு பிரியர்களுக்கு நெத்திலி கருவாடு என்றால் சொல்லவே வேண்டாம், எச்சில் ஊற ஆரம்பித்து விடும். மீனாக மட்டுமல்ல, கருவாடாக மாறிய பின்னரும் மங்காத மவுசு நெத்திலிக்கு உண்டு, அந்த அளவிற்கு சுவையாக இருக்க கூடிய இந்த நெத்திலி கருவாட்டை சுத்தம் செய்து ருசியாக ஃப்ரை செய்து குடுத்தால் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பாட்டை ஒரு புடி பிடித்து விடுவார்கள். அந்த அளவிற்கு சுவையும் மனமும் அருமையாக இருக்கும்.
நெத்திலி கருவாடு சாப்பிட்டால் காய்ச்சல், தலை வலி, முதுகுவலி போன்றவை குணமாகும் என்று கூறப்படுகிறது.. நெத்திலிக் கருவாடு என்றாலே எல்லா உணவிற்கும் பொருத்தமாக இருக்கும் .அந்த மொறு மொறு சுவை அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். எவ்வளவு சாப்பிட்டாலும் திருப்தியாக இருக்காது அந்த அளவிற்கு சுவை மிகுந்த நெத்திலி கருவாட்டை எப்படி பக்குவமாக செய்வது என்று பார்க்கலாம்.
நெத்திலி கருவாடு ஃப்ரை | Dry Anchovies Fry Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 கைப்பிடி நெத்திலி கருவாடு
- 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- புளி சிறிது
- 1 மேசைக்கரண்டி மிளகாய் தூள்
- 1/4 மேசைக்கரண்டி மஞ்சள் தூள்
- 2 வரமிளகாய்
- 5 கறிவேப்பிலை இதழ்
- உப்பு தேவைக்கு
- எண்ணெய் பொரிக்க
செய்முறை
- கருவாடை நன்கு மஞ்சள் மற்றும் புளித்த மோர் போட்டு கழுவி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். புளியை ஊற வைக்கவும்.
- கருவாடை மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, புளி இவற்றோடு சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின் ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் போட்டு தாளித்து கருவாடை அதில் போடவும்.
- கருவாடு நன்கு முறுக்கு போல ஆகும் வரை பொரிக்கவும்.
- க்ரிஸ்பியான,சுவையான கருவாடு ஃப்ரை ரெடி.