Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கவும், நமது வீட்டிற்கு எப்போதும் செல்வத்தை ஈர்க்கும் சக்தி கிடைப்பதற்கும், நாம் முழு மனதுடன் செய்ய வேண்டிய ஒரு விசேஷ பூஜை உள்ளது. செல்வ வளத்தைப் பெருக்குவதற்காகக் குபேரனுக்கு பிரத்தியேகமாக வீட்டில் விரதம் இருப்பது வழக்கம். அந்த விரதத்தின் போது லக்ஷ்மி தேவியையும் வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

-விளம்பரம்-

இவ்வாறு வழிபாடு செய்வதன் மூலம் முழு பலனையும் பெற முடியும். பணக்கார கடவுள் என போற்றப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் கொடுத்தவர் என்பதால் செல்வ பெருக வேண்டும் என்றால் குபேரரை வழிபடுவது சிறப்பானதாகும். ஆனால் குபேரரை எவ்வாறு வழிபட்டால் வற்றாமல் வீட்டில் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும். மகாலட்சுமியின் அருளால் வீட்டில் பணக் கஷ்டம் என்பது எப்போதும் இருக்காது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

குபேர வழிபாடு

செல்வச்செழிப்பான கடவுள் குபேர கடவுள். அவர் மற்ற கடவுள்களின் செல்வங்களை எல்லாம் பாதுகாத்து இரட்டிப்பாக பெருக்கி கொடுப்பார். குபேர கடவுளிடம் மட்டுமே செல்வம் குறையாது பெருகிக் கொண்டே இருக்கும். குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. மேலும் குபேர இயந்திரம், குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. புத்த மதத்திலும் குபேரன் உண்டு. அங்கு இவரை வைஸ்ரவணா என்று வழிபடுகிறார்கள். ஜைன மதத்தில் குபேரனை சர்வானுபூதி என்று வழிபடுகின்றனர். குபேர வழிபாடு கோடி செல்வத்தை கொடுக்கும் என்று சொல்லுவார்கள். வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் நிறைய பேர் குபேரருக்கு பிரத்தியேகமாக வீட்டில் வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது. அந்த வழிபாட்டை பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

யார் இந்த குபேரன்?

குபேரனின் தகப்பனார் ஒரு ரிஷி. தாயாரோ அசுர குலத்தைச் சேர்ந்தவர். குபேரன் ராவணனுக்கு சகோதர முறை. அந்தச் சகோதரனாலேயே இவரது நகரம் கைப்பற்றப்பட்டு விட லட்சுமியின் அருளால் தனி நகரத்தை ஏற்படுத்தி கொண்டார். குபேரன் சிவனின் தோழர் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு சிவனின் நண்பர் என்றும் பொருள் கொள்ளும் படியாக சிவசகா என்ற பெயரும் குபேரனுக்கு உண்டு. சிவபெருமானைக் குறித்து 800 வருடங்கள் தவமியற்றி அவரது நட்பினை பெற்றார் எனவும், பிரம்மனை நோக்கித் தவமிருந்து வடக்கு திக்கின் பாலனாக, செல்வங்களின் அதிபதியாகவும் வரம் பெற்றார் எனவும் கூறப்படுகிறது. குபேரனை ஒருவர் மனமுருகிப் பிரார்த்தித்தால், குபேரன் வழங்கும் குபேர செல்வம் அந்த பக்தருக்கு திடீர் செல்வமாக வந்து சேரும்.

குபேர வழிபாடு முறை

வியாழக்கிழமையன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு வாசலில் பச்சரிசி மாவில் கோலம் போட்டு நிலைவாசலில் சந்தனம், மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். பின் பூஜையறையில் குபேரர் படத்தை விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். குபேர பூஜையின் பொழுது மகாலட்சுமி தாயாருக்கு பிடித்த நெல்லிக்கனி அல்லது குபேரனுக்கு பிடித்த அவல் வைத்து வழிபடலாம். அதன்பின் குபேர மந்திரங்கள் அல்லது “குபேராய நமஹ” “தனபதியே நமஹ” என 108 முறை சொல்லி தாமரை இதழ்கள் அல்லது பூக்களால் பூஜிக்க வேண்டும். தாமரை மலர் லட்சுமி மற்றும் குபேரனுக்கு உகந்த மலர். வட திசைக்கு அதிபதியான குபேரனே அனைத்து செல்வங்களையும் அருள்பவன். அதனால் வடக்கு நோக்கி நிலைவாசலிலும் ஒரு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். குபேரனை வீட்டின் வாசலில் வைத்து பூஜித்தால், நமது செல்வத்திற்கு பாதுகாப்பும், செழிப்பும் உண்டாகும். அதுமட்டுமல்லாமல் குடும்பத்தில் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

-விளம்பரம்-

குபேர வழிபாடு பலன்கள்

குபேரன், மிகச் சிறந்த சிவபக்தர். அமைதியான குணம் கொண்டவர். ஏழ்மையான ஒருவன் பணக்காரனாக வேண்டு மென்றால், சாந்த குணம் தேவை. பொறுமையுடன் குபேரனை நினைத்து வழிபட்டு வந்தால் அளவற்ற செல்வமும், கல்வி அறிவும் கிடைக்கும். நாம் எளிய முறையில் குபேரருக்கு விரதம் இருந்து பூஜை செய்து வந்தால் நம்முடைய தீராத கடன் தொல்லைகள் நீங்கிவிடும். செல்வ செழிப்பும் அதிகரிக்கும். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து குபேர பூஜை செய்யலாம். ஆண்கள் விரதமிருந்து வழிபட்டால் அவர்களுக்கு வணிகத்தில் இருக்கும் கடன் பிரச்னைகளில் இருந்து விடுபட்டு செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

இதனையும் படியுங்கள் : பண கஷ்டங்கள் தீர்ந்து வீட்டில் செல்வம் பெருகி லட்சுமி கடாட்சம் பெருக நாம் செய்ய வேண்டியவை..!