நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் அவர்களுக்கு தகுதியான வேலையை தேடி செல்கின்றனர். பலர் சொந்த வேலையை தொடங்குகின்றனர். வேலையில்லை என்பது பலரும் முக்கியமான பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனை தீருவதற்கு வழிபாடுகள், ஆன்மிக பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தாலே பல மாற்றங்களை சந்திக்க முடியும். அந்த வகையில் ஆடி மாதத்தை போல ஆவணி மாதத்திலும் வரும் சில கிழமைகளும், அந்த நாட்களில் செய்யப்படும் வழிபாடுகளும், ஆன்மிக பரிகாரங்களும் நம்முடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அப்படி ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையில் எப்படி வழிபட்டு, என்ன பரிகாரம் செய்தால் அரசு வேலை, வேலையில் பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும் என்பதை இந்த ஆன்மிகப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஆவணி மாதத்தின் மகிமை
ஆவணி மாதம், தமிழ் மாதங்களில் ஐந்தாவதாக வரும் மாதம், இது பல்வேறு சிறப்புகள் கொண்டது. இந்த மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிப்பதால், சூரியனின் ஆதிக்கம் நிறைந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் ஆவணி என்பது துன்பங்கள் நீங்கும் மாதம் என்றும், இது ஈசனுக்கு உரிய மாதம் என்றும் சொல்வர். ஆடி மாதம் போய் ஆவணி வந்தால் ஆயிரம் நன்மைகள் தேடி வரும் என்பார்கள். ஆவணியில் அத்தனை நாள்களும் மங்கல நாள்களே என்பது ஆன்றோர் வாக்கு. பெருமைமிகு இந்த மாதத்தில் தான் கணநாதர், கண்ணபிரான் திருஅவதாரங்கள் நடைபெற்றன. இம்மாதத்தில் தான் சாதுர்மாஸ்ய விரதத்தின் உச்ச தினங்கள் வருகின்றன. இதனால் இந்த மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகள் முக்கியமானவை என்பர். ஆகையால் சூரியனுக்குரிய இந்த ஆவணி மாதத்தில், அவருக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் செய்யப்படும் வழிபாடுகள் வேலை, அரச பதவி, ஆரோக்கியம், பதவி உயர்வு ஆகியவற்றை அளிக்கும்.
பரிகாரம் செய்யும் முறை
வேலை என்பது ஒவ்வொருவரின் அடையாளமாகவும், கெளரவமாகவும் பார்க்கப்படுகிறது. அனைவருக்கும் வேலை வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அரசு வேலை கிடைப்பதும், நினைத்தது போல் வேலை கிடைப்பது மிக சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது. பெரும்பாலானவர்களுக்கு வேலை கிடைப்பது என்பதே பெரும் போராட்டமாக உள்ளது. பதவி உயர்வு, அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்தாலே போதும் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆவணி மாதம் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், உங்களுக்கு விருப்பமான சிவன் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் நவக்கிரக சன்னதியில் அல்லது தனி சன்னதியில் உள்ள சூரிய பகவானின் முன் கோதுமை பரப்பி அதன் மீது 12 அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி, அங்கேயே அமர்ந்து மனதார சூரியனை நினைத்து 108 முறை வலம் வந்து சூரிய பகவானுக்குரிய 108 போற்றி துதிகளை சொல்லி வழிபடலாம். ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து, சூரிய ஹோரை நேரத்தில் சூரியனை வழிபடுவது சிறப்பு. கோவில் செல்ல முடியாதவர்கள் காலையில் எழுந்ததும் “ஆதித்ய ஹ்ருதயம்” சொல்லி, சூரிய பகவானை வழிபடுவது சிறப்பு.
பரிகாரம் செய்வதன் பலன்கள்
அரசு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு முதலில் சூரிய பகவானின் அனுகிரகம் கிடைக்க வேண்டும். எனவே, வேலைக்கான முழு பலனையும் கொடுக்கக் கூடிய கடவுள் அவரே. அதனால் நீங்கள் இதனை தொடர்ந்து செய்து வந்தால், அரசாங்க வேலைக்கான வாய்ப்புகள் உங்களை தேடி அதிகமாக வரும். வேலை மட்டுமல்லாமல் இந்த பரிகாரம் செய்தால் பித்ரு சாபம் அகலும், புத்திர பாக்கியம் கிடைக்கும், கேட்கும் வரங்கள் கிடைக்கும், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும், சனி, சூரிய திசை, கிரக தோஷங்கள் அகலும்.
இதனையும் படியுங்கள் : ஒற்றுமையை அதிகரிக்கும் உப்பு மிளகு பரிகாரம்


