ஒருவரின் வாழ்வில் மாற்றங்களையும், ஏற்றங்களையும் தரும் பகவனாக சனி பகவான் உள்ளார். ஈஸ்வரனுக்கு இணையான பட்டத்தை பெற்றவர் சனீஸ்வர பகவான் ஆவார். ஆயுள்காரகன் என்று அழைக்கப்படும் சனீஸ்வர பகவான் சூரியனுக்கும் சாயதேவிக்கும் பிறந்தவர் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் சனிப்பெயர்ச்சி நிகழும்போதும் பலரது வாழ்விலும் தாக்கங்கள் ஏற்படுகிறது. நவகிரகங்களின் இடமாற்றம்தான் ஒருவரின் ஜாதகத்தை முடிவு செய்வதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் சனி பகவானின் இடமாற்றம் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது. இந்த சூழலில் இன்று சனி வக்கிர நிவர்த்தி அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக ஒவ்வொரு ராசியிலும் பலவித மாற்றங்கள் ஏற்பட உள்ளது. சனிபகவானின் இடமாற்றம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நவ கிரகங்களில் சனி மெதுவாக நகரும் கிரகம் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார் எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்றனர். கும்ப ராசியில் இருந்து சனிபகவானின் பார்வை மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசிகளின் மீது விழுகிறது. திருநள்ளாறு கோவில் பஞ்சாங்கப்படி சனிபகவான் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சனி பெயர்ச்சியையொட்டி இன்று திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனி பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
புராணத்தில் சனி பகவான் யார்?
சனீஸ்வர பகவான், சூரிய பகவானின் குமாரர். இவருடைய மாதா, சாயா தேவியார் சாயாதேவிக்கு நிஷுபா, பிருத்வீ என்னும் பல பெயர்கள் உண்டு. சூரியதேவன் த்வஷ்டா என்பவரின் குமாரத்தியான சுவர்ச்சலாத் தேவியைத் திருமணம் செய்துகொண்டார். சுவர்ச்சலா தேவிக்கு ஸமுக்ஞா, ஸரேணு, ராக்ஞீ, பிரபாஸா என்றும் பல பெயர்கள் உண்டு.
சனி கொடுத்தால் எவர் தடுப்பார்?
சனி பகவான் கொடுத்தால் மற்ற கிரகங்களால் தடுக்கமுடியாது. கெடுத்தாலும் தடுக்க முடியாது. ஆனால், சனி கொடுமையானவர் என்று சொன்னால், அவர் ஏன் கொடுமைக்காரர் என்று சிந்திப்பதில்லை. ஏன் கெடுதல் செய்கிறார் என்பதைப் பற்றி நாம் யாரும் யோசிப்பது இல்லை. நாம் செய்த தவறுக்கு தயவு தாட்சண்யம் இல்லாமல் அவர் கண்டிப்பாக இருப்பார் என்பதுதான் உண்மை. சனி என்பது நாம்தான் என்பதை யாரும் உணர்வது கிடையாது. சனி குறித்து அஞ்சுவது நம்மைக் குறித்து நாமே அஞ்சுவது. சனியைத் திட்டுவது நம்மை நாமே திட்டிக்கொள்வது.
சனி பகவானை நேருக்குநேர் வணங்காமல் பக்கவாட்டில் நின்றவாறு வணங்க வேண்டும். இவ் வழிபாட்டை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி செய்வது மிகச் சிறந்த பலன்களை தரும். சனி பகவானின் புதிய மாற்றத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை சில ராசிகள் பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்று காணலாம்!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு லாப சனி காலமாகும். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதேநேரம் ஆடம்பரக் கேளிக்கைகளுக்காக செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளவும். மாணவர்கள் உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்வதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் கிடைக்கப் போகிறது. சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். உங்கள் எதிரிகளின் பலம் குறையும். நம்பிக்கையுடன் உங்கள் பணிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்கிய சனி தொடங்குகிறது. சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். இந்த பெயர்ச்சியில் மனதில் தெளிவு பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே முன்னின்று செயல்பட்டால் வியாபாரத்தில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு பூர்வ புண்ணிய சனி தொடங்குகிறது. கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்த துலாம் ராசிக்காரர்களுக்கு இனி நல்லது அதிகம் நடக்கும். சனி உங்களுடைய ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி என்பதால் நிறைய புண்ணியங்கள் கிடைக்கப்போகிறது. இந்த சனிப் பெயர்ச்சியால் இதுவரை இருந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும்.