பொதுவாக நம் வீட்டில் எந்த பொருளை வைத்தாலும் அதை வாஸ்துபடி தான் வைக்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அப்படி நாம் வாஸ்துபடி வைக்க தவறினால் அது நம் வீட்டில் பெரிய தாக்கத்தை உருவாக்கும். எனவே எந்த ஒரு பொருளை வைத்தாலும் நாம் வாஸ்து படி தான் வீட்டில் வைக்க வேண்டும். ஏனென்றால் நாம் வைக்கும் ஒவ்வொரு பொருளும் அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு இடமும் ஒரு ஆற்றலை உற்பத்தி செய்கின்றன. தவறான இடத்தில் தவறான பொருளை வைத்தால் அது எதிர்மறை ஆற்றலை உருவாக்கி வீட்டில் ஒரு தாக்கத்தை உருவாக்கும். அதற்கு தான் வாஸ்து படி பார்த்து பொருளை வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இக்காலகட்டத்தில் பலரும் அவர்களது வீட்டில் வாஷிங் மெஷின் வைத்துள்ளார்கள். ஆனால் இதை யாரும் எந்த திசையில் வைக்க வேண்டும் என்று பார்த்து வைப்பதில்லை. அவர்களுக்கு எங்கு வசதியாக உள்ளதோ அங்கு வைத்து வைத்துவிடுகிறார்கள். இது அக்குடும்பத்தில் இருப்போருக்கு நிதி நிலைமை, தொழில் என பல தாக்கத்தை உருவாக்கும். இப்பதிவில் வாஷிங்மெஷினை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

வாஷிங் மெஷினை பயன்படுத்தும் போது நினைவில் கொள்ள வேண்டியவை
வாஸ்து சாஸ்திரத்தில் வாஷிங் மெஷினை பயன்படுத்துவதற்கு ஒருசில விதிகள் உள்ளன. அந்த விதிகளைப் பின்பற்றி வந்தால், வாழ்க்கை மேம்படும். வாஸ்து விதிகளின் படி, வாஷிங் மெஷினில் அழுக்குத் துணிகளை இரவு முழுவதும் ஊற வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, வாழ்வில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் வீட்டில் உள்ளோர் சிறு விஷயங்களுக்கும் அதிகம் கோபமும், எரிச்சலும் அடையக்கூடும்.
கெட்ட சக்திகள் வீட்டில் சேரும்
வாஸ்துப்படி, வாஷிங் மெஷினில் அழுக்கு நீரை சேகரித்து வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த அழுக்கு நீர் வீட்டில் எதிர்மறை ஆற்றல் பரப்பும். ஆனால் நிறைய பேர் இந்த தவறை செய்வதுண்டு. இப்படி செய்தால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலால் வீட்டின் சூழல் எப்போதும் பதட்டமாக இருக்கும். வீட்டில் உள்ளோர் சிறு விஷயங்களுக்கும் பெரிய சண்டையைப் போடக்கூடும். முக்கியமாக வீட்டில் இருக்கும் வாஷிங் மெஷினில் சிறு பிரச்சனை என்றாலும், அதை தாமதிக்காமல் உடனே சரிசெய்ய வேண்டும்.

எந்த திசையில் வாஷிங் மெஷினைப் பயன்படுத்தக்கூடாது?
வாஷிங் மெஷினை வாங்கி வைக்கக்கூடாத இடத்தில் வைத்தால் அது எதிர்மறை ஆற்றலை உருவாக்கும். எனவே அதை எந்த திசையில் வைக்க கூடாது என்பதனை பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
வடகிழக்கு
பொதுவாக வாஷிங் மெஷினை வடகிழக்கு திசையில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் அது எதிர்மறை ஆற்றலை உருவாக்கி குடும்பத்தில் இருப்பவருக்குள் சண்டை, சச்சரவு, எதற்கெடுத்தாலும் கோபம் மற்றும் அவர்களுக்கு தலைவலியை உண்டாக்கும்.
வடக்கு
வடக்கு திசை நீர் உறுப்புடன் தொடர்புடையவை. இந்த திசையில் நெருப்பு உறுப்புடன் தொடர்புடைய வாஷிங் மெஷினை வைத்தால், அது எதிர்மறை விளைவை தான் ஏற்படுத்தும். முக்கியமாக வடக்கு திசையில் வாஷிங் மெஷினை வைக்கும் போது, அது தொழிலில் தடைகளை உருவாக்குவதோடு, மனநிலையை நிலையற்றதாக வைத்திருக்கும்.
கிழக்கு
கிழக்கு திசையும் நீருடன் சம்பந்தப்பட்டது தான். எனவே இத்திசையில் நாம் வாஷிங் மெஷினை வைத்தால் குடும்பத்தில் உள்ளவருக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகும். அது மட்டும் இல்லாமல் நமக்கு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.
எந்த திசையில் வாஷிங் மெஷினை வைக்கலாம்?
தென்கிழக்குவாஸ்து படி தென்கிழக்கு திசை நெருப்புடன் சம்பந்தப்பட்டது. எனவே இத்திசையில் வாஷிங் மெஷினை வைத்தால் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். அதன் விளைவாக குடும்பத்துள் ஒற்றுமை அதிகரிக்கும், தன்னம்பிக்கை பிறக்கும் மற்றும் எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய வல்லமையும் கிடைக்கும்.
வடமேற்கு திசை
வடமேற்கு திசையும் வாஷிங் மெஷினை வைக்க உகந்த திசையாகும். இந்த திசையில் வாஷிங் மெஷினை வைக்கும் போது, வீட்டில் உள்ளோரிடையேயான உறவு சிறப்பாக இருக்கும் மற்றும் மரியாதை அதிகரிக்கும், அனைத்து வழிகளில் இருந்தும் உதவிகள் கிடைக்கும். எனவே இந்த திசையில் வைக்கலாம்.
மேற்கு திசை
ஒருவேளை தென் கிழங்கு மற்றும் வடமேற்கு திசைகளில் வாஷிங் மிஷினை வைக்க முடியாதவர்கள் மேற்கு திசை நோக்கி வைக்கலாம். இதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.



