நமது இந்திய குடும்பங்களில் சமையலறை பெரும் பங்காற்றுகிறது, ஏனென்றால் சமையலறை தான் ஒரு குடும்பத்தின் ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் தீர்மானிக்கிறது. அதனால் தான் இந்தியாவில் பலரும் அவர்களது சமையலறையில் அன்னபூரணி தேவி மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படத்தை வைத்து வழிபடுகிறார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, சமையலறை என்பது குடும்பத்தில் ஊட்டச்சத்து, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தின் ஓட்டத்தை உறுதி செய்யும் புனிதமான இடமாக பார்க்கப்படுகிறது. எனவே, சமையலறையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பது மிக அவசியம்.
ஆனால் சமையலறையிலும் வீட்டிலும் வாஸ்து தோஷத்திற்கு அமைதியாக வழிவகுக்கும் கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் தவறுகள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். குடும்பத்தில் அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை உறுதிப்படுத்த சமையலறையில் உள்ள வாஸ்து தோஷத்தை சரிசெய்ய உதவும் சில குறிப்புகளை இப்பதிவில் காணலாம்.

எளிய சமையலறை ஏற்பாடு குறிப்புகள் வாஸ்து தோஷத்தை நீக்கும்
வாஸ்து சாஸ்திரம் என்பது மனித உயிர்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுவது ஆகும். ஆனாலும் பெரும்பாலான பல்துறை கட்டடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இது கடைப்பிடிப்பதில்லை. இதனால் நமக்கு சில பிரச்சனைகள் உருவாகும் அதை தவிர்ப்பதற்கு, நமது சமையலறையில் சிறு சிறு திருத்தங்களை நாம் செய்தாலே வாஸ்து பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
வாஷ் பேஷன்
வாஷ் பேஷன், சிங்க், குழாய்கள் மற்றும் வடிகால்களை எப்போதும் சமையலறையின் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். இது சமையலறையில் வாஸ்துவின் ஆரோக்கியமான சமநிலை குறிக்கும். மேலும், இது குடும்பத்தில் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியின் ஓட்டத்தை உறுதி செய்கிறது.
அடுப்பை எங்கு வைக்க வேண்டும்
சமையலறையில் அடுப்பு மற்றும் சமைக்கும் உபகரணங்கள் பெரும்பங்காற்றுகின்றன. ஏனென்றால் அவை தான் சமைக்க பயன்படுகின்றன. அடுப்பு மற்றும் சமையல் உபகரணங்களை நாம் வேறு திசையில் வைப்பது கூட எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கலாம். எனவே அடுப்பையும், உபகரணங்களையும் எப்பொழுதும் சமையலறையின் தென்கிழக்கு திசையில் தான் வைக்க வேண்டும்.

உணவை கவனமாக சேமிக்கவும்
சமையலறையின் வடகிழக்கு மூலையில் தானியங்கள் கொண்ட பெரிய கொள்கலன்கள் அல்லது ஆட்டா, கோதுமை, அரிசி போன்ற மூலப்பொருட்களின் கனமான பாத்திரங்களை சேமிப்பதைத் தவிர்க்கவும். சமையலறை பகுதியின் தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் உலர் பொருட்களின் கனமான கொள்கலன்களை சேமித்து வைப்பது குடும்பத்தில் செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைக் கொண்டுவர உதவுகிறது என்று நம்பப்படுகிறது.
வண்ணங்களை கவனமாக தேர்வு செய்யவும்
வாஸ்துபடி குடும்ப தலையெழுத்தை தீர்மானிப்பதில் வண்ணங்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. பொதுவாக சமையலறை மிகவும் சூடான இடம், அங்கு நேர்மறை ஆற்றலை அதிகரிக்க நாம் மஞ்சள், பழுப்பு, ஆரஞ்சு போன்ற நிறங்களை பயன்படுத்த வேண்டும். இருப்பினும் வாஸ்து குறைபாடுகள் ஏற்பட்டால் பச்சை நிறத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் நெருப்பு மற்றும் அபாயத்தை குறிக்கும் நிறங்களான சிவப்பு மற்றும் நீலம் போன்ற வண்ணங்களை உபயோகிப்பதை நாம் தவிர்க்க வேண்டும்.


