வினைத் தீர்ப்பான் விநாயகர் என்பது நம் முன்னோர்களின் கூற்று. ஆன்மீக வழிபாட்டில் முழு முதற் கடவுள் விநாயகருக்கே முன்னுரிமை உண்டு. விக்னங்களைக் களைவதில் விநாயகருக்கு இணையாக வேறு எந்த கடவுளையும் கூற முடியாது. ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சகல விதமான தடைகளையும் நீக்குவதில் வல்லவராக கருதப்படுபவர் விநாயகர். எந்த செயலையும் தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வழிபட்டால் வெற்றி நிச்சயம் என்பது உண்மை. விநாயகர் மிக எளிமையான கடவுள் என்றாலும் அவரின் அருளை முழுவதுமாக பெறுவதற்கு நாம் காத்திருக்கத் தான் வேண்டும். ஒரு ஜாதகத்தில் கிரகங்களால் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சினைகளையும் தோஷங்களையும் தீர்க்கக் கூடிய சக்தி படைத்தவர் விநாயகர். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை எப்படி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது குறித்து இந்த ஆன்மீகப் பதிவில் பார்ப்போம்.

தோஷங்கள் நீங்க விநாயகர் வழிபாடு
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நன்மையோ தீமையோ அவற்றை நிர்ணயிப்பது கிரகங்களே. நவக்கிரக சுழற்சியினால் வாழ்வில் ஏற்படும் சாதக, பாதகங்களைக் கட்டுப்படுத்தி நம்மை காத்தருள்பவர் நவக்கிரக விநாயகர். ஒன்பது கிரகங்களையும் இவர் தன்னுள் அடக்கி இருப்பதால், சக்தி மிக்கவராக விளங்குகிறார். அதனால் தான் நவகிரகங்களின் தலைவனாக திகழ்கிறார் விநாயகர் பெருமான். விநாயகப் பெருமானை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நவகிரகங்களின் அருளையும் நம்மால் பெற முடியும். அதுமட்டுமல்லாமல் நவகிரகங்களால் ஏற்படும் தீய பலன்களில் இருந்து விடுபடவும், நற்பலன்களை பெறுவதற்கும் நாம் விநாயகரை தான் வழிபட வேண்டும். விநாயகரை எப்படி வழிபட்டால் கிரகங்களால் ஏற்படும் தோஷம் நீங்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வழிபாட்டு முறை
இந்த வழிபாடு செய்வதற்கு உங்கள் வீட்டில் உள்ள விநாயகரின் படம் அல்லது சிலையை நன்கு சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து கொள்ளுங்கள். விநாயகர் படத்திற்கு முன் ஒரு தட்டை வைத்து அதில் அருகம்புல்லை நிரப்பி அதன் மேல் கிழக்கு பார்த்தவாறு ஒரு அகல் விளக்கை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். இந்த வழிபாட்டின் போது விநாயகருக்கு பிடித்த ஏதாவது ஒன்றை நைவேத்தியமாக படைத்தால் மிகவும் சிறந்தது. பின் அந்த விளக்கை நோக்கி அமர்ந்து “ஓம் கணேசாய நமஹ” என்னும் மந்திரத்தை 54 முறை கூற வேண்டும்.
இந்த வழிபாட்டை ஒவ்வொரு மாதத்தின் முதலில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை நீங்கள் வழிபாடு செய்யும் தினத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 7:45 மணியிலிருந்து 8: 45 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை 6:30 மணியிலிருந்து 7:30 மணிக்குள் செய்யலாம். இந்த வழிபாடு செய்யும் போது நாம் ஏற்றிய விளக்கு குறைந்தது அரை மணி நேரமாவது எரிய வேண்டும். அதன்பிறகு நாம் விளக்கை குளிர் வைத்து அருகம்புல்லை விநாயகருக்கு படைத்து விடலாம். இவ்வாறு நாம் விநாயகரை வழிபடும் போது நவக்கிரகதோஷம் நீங்கி நன்மை உண்டாகும்.
இதனையும் படியுங்கள் : வாழ்க்கையில் முன்னேற விநாயகர் வழிபாடு


