நவகிரகங்களில் மிக முக்கியமானவராகவும், நீதிமானாக திகழ்பவர் சனி பகவான். பலருக்கும் சனி பகவான் என்றால் ஒரு வித அச்ச உணர்வு ஏற்படுவதுண்டு. ஜோதிடத்தைப் பின்பற்றாதவர் கூட சனி பெயர்ச்சியின் போது அவரின் ராசிக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ஆர்வம் காட்டுவர். ஒருவரது ஜன்ம ராசிக்கு முந்தைய ராசியில் இவர் சஞ்சரிக்கும் போது, அந்த ஜாதகருக்கு ஏழரைச்சனி ஆரம்பமாகிறது. நாம் செய்துள்ள நன்மை தீமைகளின் அடிப்படையிலேயே சனி பகவான் நமக்கு தரும் பலன்களும் அமையும். அதனால் சனி பகவானைப் பார்த்து யாரும் அச்சம்கொள்ளத் தேவையே இல்லை. இருப்பினும் சனிபகவானின் பிடியிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் பெருமாளை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.

புரட்டாசி மாதத்தில் ஏன் பெருமாளை வழிபாடு செய்கிறார்கள்?
பகவத்கீதையில் கிருஷ்ணர், மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என குறிப்பிடுகிறோம். அந்த மார்கழி மாதத்திற்கு இணையான மிகவும் அற்புதமான மாதம் தான் புரட்டாசி மாதம். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளிலும், புதன்கிழமைகளிலும் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். அதுமட்டுமல்லாமல் சூரியன், எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ அந்த ராசிக்குரிய தேவதைகளை வழிபடுவது நம் மரபு. அந்த வகையில் புத்திக்கு அதிபதியான புதன் மிதுனம், கன்னி எனும் இரு வீடுகளில் புதன் உச்சம் அடைந்து இருக்கும் கன்னி ராசியில், சூரியன் சஞ்சரிக்கும் புரட்டாசி மாதத்தில் அதிதேவதையான மகாவிஷ்ணுவை வழிபடுவது உயர்ந்த பலன்களைப் பெற்றுத் தரும் என நம்பப்படுகிறது.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று மூலவருக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டு வரலாம். துளசியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே நாராயணருக்கு மகாலட்சுமியை கொடுத்து வணங்கி வருவதால் நம்முடைய வாழ்வு வறுமையின்றி செழிக்கும். அதுமட்டுமல்லாமல் மிளகு சேர்த்து வெண்பொங்கல், எள் சேர்த்து புளி சாதம் செய்து பெருமாளுக்கு நெய்வேதியும் வைத்து வழிபாட்டை மேற்கொண்டால், நமக்கு சனிபகவானிடம் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த சனிக்கிழமை வழிபாட்டை புரட்டாசி மாதத்தில் மட்டுமில்லாமல் எல்லா மாதங்களிலும் கடைபிடிக்கலாம்.
சனிபகவான் பிடியில் இருந்து தப்பிக்க விளக்கு வழிபாடு
சனியின் தீய பாதிப்புகளில் இருந்து தப்பிக்க மிகச் சிறந்த பரிகாரம் பெருமாள் வழிபாடு தான். இந்த வழிபாட்டை செய்ய ஒன்பது மிளகை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு கரு நீல துணியில் போட்டு முடிச்சாக கட்டிக் கொள்ள வேண்டும். பின் இந்த முடிச்சை ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். பின் அங்கு உள்ள நவகிரக சன்னதியை ஒன்பது முறை வலம் வந்து மனதார வழிபட வேண்டும். இப்படி வழிபடுவதன் மூலம் சனியால் ஏற்படும் மிக கடுமையான சோதனை காலங்களில் இருந்து நாம் விடுபட முடியும். அதோடு பெருமாளின் பக்தர்களை சனி பகவான் ஒன்றும் செய்ய மாட்டார்.
இதனையும் படியுங்கள் : சனி பகவான் தாக்கம் குறைய பரிகாரம்


