பொதுவாக ஒரு குலத்தில் முன்பு வாழ்ந்து ஏதேனும் ஒரு தியாகம் செய்து மறைந்து குளத்தில் பிற்காலத்தில் வருகின்றவர்களை காத்து அருள் புரிபவர்களே குலதெய்வங்கள். என்னதான் பல்வேறு தெய்வங்களை வணங்கினாலும் நம்முடைய குல தெய்வத்தை வணங்கினால் மட்டுமே நம் வீட்டிற்கு தேவையான அனைத்து சந்தோஷங்களையும் நிம்மதியையும் பெற முடியும். குலதெய்வ வழிபாடு என்பது ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது. குறிப்பாக மாசி மற்றும் பங்குனி, ஆடி மாதங்களில் குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் சிறந்தது. அனைவரும் தங்களுடைய குலதெய்வத்தை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஒரு சிலர் மாத மாதம் குலதெய்வ வழிபாடு செய்வார்கள்.
இன்னும் ஒரு சிலர் வார வாரம் அனைத்து தெய்வங்களையும் வணங்கும் போது முதலில் குலதெய்வத்தை வழிபட்டு விட்டே பிறகு மற்ற தெய்வங்களை வழிபடுவார்கள். ஆனால் குலதெய்வம் நம்முடைய வீட்டிலேயே இருந்து நம்முடைய குடும்பத்தை காக்க வேண்டும் என்றால், அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். அமாவாசையில் குலதெய்வ வழிபாட்டினை செய்யும் போது வீட்டில் இருக்கும் தீமைகள் விலகி, நன்மைகள் நடைபெறும். ஆடி அமாவாசை தினத்தில் குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
ஆடி அமாவாசை பித்ரு வழிபாட்டு நேரம்
ஆடி அமாவாசை நாள் முன்னோர்களை நினைத்து வணங்கும் நாள். அன்றைய தினம் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும். பகல் 11 மணி முதல் 1 மணிக்குள் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, 10 பேருக்காவது அன்னதானம் அளித்து, பித்ருக்கள் வழிபாட்டினை நிறைவு செய்து விட வேண்டும். அன்றைய தினம் பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது நல்ல பலன் தரும். அதே போல், முன்னோர்களை நினைத்து ஆடி அமாவாசை நாளில் இலுப்பை எண்ணெய் ஏற்றி வழிபடலாம். ஏதாவது தோஷம் இருந்தாலும் நீங்கும் என்பது நம்பிக்கை.
ஆடி அமாவாசை குலதெய்வ வழிபாடு
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த நாள், திருவிழாக் காலம், குலதெய்வம் வழிபாட்டுக்கு உகந்த மாதம் என்று ஆடி மாதத்தின் சிறப்பை சொல்லிக் கொண்டே போகலாம். குறிப்பாக ஆடி மாத அமாவாசையில் குல தெய்வத்தை வழிபாட வேண்டும். உங்களுக்கு ஏற்பட்ட பித்ரு தோஷம் முதல் கிரக தோஷம் வரை அனைத்து வித தோஷங்களும் குலதெய்வ வழிபாட்டால் நீங்கும். அதுவும் அமாவாசையில் வழிபாடு செய்யும் பட்சத்தில் பாவங்களும் நமது வம்சத்திற்கு ஏற்பட்ட சாபங்களும் இருளோடு இருளாக மறைந்து போகும்.
அமாவாசை அன்று குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபடுபவர்கள் சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல விதமான பொருட்களால் அபிஷேகம் செய்து, புதிய வஸ்திரம் சாத்தி, அந்த தெய்வத்திற்குரிய அஷ்டோத்திரம் படித்து, சர்க்கரை பொங்கல் அல்லது ஏதாவது ஒரு நைவேத்தியம் படைத்து, சாம்பிராணி காட்டி வழிபட வேண்டும். குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபட இயலாதவர்கள் வீட்டில் இருந்தவாறு குலதெய்வ வழிபாடு செய்து ஏதேனும் ஒரு ஏழைக்கு உணவளித்த பின் உண்ண வேண்டும் இவ்வாறு வழிபட குலதெய்வ கோவில் சென்று வந்த புண்ணியத்தை பெற முடியும்.
ஆடி அமாவாசை குலதெய்வ வழிபாட்டு முறை
வீட்டிலேயே குலதெய்வ வழிபாடு மேற்கொள்பவர்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் விளக்கேற்றி விட்டு, குலதெய்வ படத்திற்கு பூவால் அலங்காரம் செய்து விட்டு, குலதெய்வத்திற்குரிய அஷ்டோத்திரம் சொல்லி வழிபட வேண்டும். பின் வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும். நீங்கள் விருப்பப்பட்டால் சாம்பிராணியில் குங்குல்யம், மருதாணி விதை, பச்சை கற்பூரம் சேர்த்து சாம்பிராணி தூபம் காட்டலாம். இவ்வாறு சாம்பிராணி தூபம் காட்டுவதால் வீட்டில் உள்ள அனைத்து தீய சக்திகள் அனைத்தும் வீட்டிலிருந்து வெளியேறி விடும். பின் உங்கள் குலதெய்வத்திற்கு பிடித்த உணவை நைவேத்தியமாக வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபட்டால் குலதெய்வத்தின் அருள் வீட்டில் எப்போதும் நிறைந்திருக்கும். அதுமட்டுமல்லாமல் குலதெய்வத்தின் அருளால் தொட்ட காரியங்கள் அனைத்தும் நன்மையில் முடியும், தடைபட்டு வந்த சுப காரியங்கள் விரைவில் நிறைவேறும், வாழ்வில் நிம்மதி ஏற்படும், குடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்பட்டு, தோஷங்கள் நிவர்த்தி ஆகி, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.
இதனையும் படியுங்கள் : ஆடி வெள்ளிக்கிழமை அம்மனை இப்படி வழிபடுங்கள் கேட்டது அனைத்தும் கிடைக்கும்!!