ஆடி வெள்ளிக்கிழமை அம்மனை இப்படி வழிபடுங்கள் கேட்டது அனைத்தும் கிடைக்கும்!!

- Advertisement -
குன்னூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் 67ம் ஆண்டு தீமிதி திருவிழா – Madhimugam

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஆன்மீக ரீதியாக முக்கியமான ஒன்று. அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழா, கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் போன்றவை நடைபெறும். ஆடி மாதம், அம்மன் வழிபாட்டிற்குரிய மாதமாகும். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட, அம்பிகையின் சக்தி அதிகரித்து காணப்படும். இந்த மாதத்தில் சிவ பெருமானே அம்பிகைக்குள் அடக்கம் என சொல்வார்கள். இந்த மாதத்தில் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை போன்ற முக்கிய நாட்கள் மட்டுமல்ல எந்த நாளில் எல்லாம் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டாலும் அம்மனின் அருள் கிடைக்கும். அதிலும் இந்த ஆண்டு ஆடி மாதம் மிகவும் சிறப்புக்குரிய மாதமாக உள்ளது. காரணம், ஆடி முதல் வெள்ளியானது சுக்கிரவார பிரதோஷத்துடன் இணைந்த வந்தது. ஆடி முதல் ஞாயிறு, ஆடித்தபசு நாளான ஆடிப் பெளர்ணமியுடன் இணைந்து அமைந்திருந்தது. அதே போல் ஆடி 2வது வெள்ளியும் குழந்தை வரம் தரும் முருகப் பெருமானுக்குரிய தேய்பிறை சஷ்டியுடன் இணைந்த வருகிறது. அதனால் இந்த ஆடி வெள்ளிக்கிழமை தவற விடாத ஒன்று, இந்த நாளில் எப்படி வழிபட்டால் அம்மனின் அருள் கிடைக்கும் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

ஆடி வெள்ளி

பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த நாட்களாகும். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். இதில் தஷ்ணாயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் தனிச்சிறப்பு உடையவையாக கருதப்படுகின்றன. பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நிறைவேறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும். நீண்ட ஆயுள் கிடைக்கும். ஆடி மாத வளர்பிறை வெள்ளியில் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்தால் சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கும். ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அம்மனுக்கு உகந்தது. ஆடி மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டை முறையாக செய்தால் நீண்ட காலமாக தீர்க்க முடியாத பல இன்னல்கள் தீரும்.

- Advertisement -

ஆடி மாதத்தின் வெள்ளி

இந்த ஆண்டு ஆடி மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமைகள் உள்ளன. ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை ஜூலை மாதம் 26ம் தேதி வருகிறது. ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை அங்காள அம்மனுக்கு உகந்தது. காளி தேவியின் அம்சமான அங்காள அம்மனை விரதம் இருந்து பூஜை செய்து வணங்கி வந்தால், புத்திக்கூர்மை அதிகரிப்பதோடு, வலிமையும், வீரமும் அதிகரிக்கும். இந்த ஆண்டு ஆடி இரண்டாவது வெள்ளக்கிழமை, முருகப் பெருமானுக்குரிய தேய்பிறை சஷ்டியும் சேர்ந்தே அமைந்துள்ளது. அதனால் இந்த நாளில் அம்மன் வழிபாட்டுடன், முருகப் பெருமான் வழிபாட்டை‌ மேற்கொள்வது சிறப்பானது.

ஆடி வெள்ளியில் வழிபட வேண்டிய அம்மன்

ஆடி மாதத்தை சக்தி மாதம் என்று சொல்வார்கள். சக்தி இருந்தால் தான் ஆட முடியும். பாட முடியும். அந்த சக்தியை கொடுப்பவள் அன்னை ஆதிபராசக்தி. எனவே தான் பெரும் கோயில்களிலிருந்து, கிராமங்களில் உள்ள எளிய கோயில்கள் வரை ஆடிமாதம் விழாக்கோலம் கொள்கிறது. அந்தவகையில் அம்மனின் பலவிதமான ரூபங்களில் ஒன்று காமாட்சி. அனைவருக்கும் தாயாக விளங்கும் காமாட்சி அம்மனை தான் ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையில் வழிபட வேண்டும்.

ஆடி மாத அம்மன் வழிபாடும், அதன் நேரமும்

எத்தனை வெள்ளிக் கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கும், தை மாத வெள்ளிக்கும் என்று ஒரு தனிப்பெருமை உண்டு. அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வரும். வாரக் கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். சகல செல்வங்களும் கிடைக்க வெள்ளிக்கிழமை விரதம் உதவும். திருமகள் அருளைப் பெற்றுத் தரும். ஆடி வெள்ளியன்று காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, அந்த நாள் முழுவதும் விரதம் இருக்கலாம். நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழம் சாப்பிடலாம். பின் ஆடி வெள்ளி இரவு 8 முதல் 9 மணிக்குள் வீட்டில் உள்ள காமாட்சி அம்மனின் படத்திற்கு பூ வைத்து, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், பாயாசம் போன்ற‌ இனிப்புகளை படைத்து வழிபடலாம். அதுமட்டுமல்லாமல் வீட்டில் குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும்.

-விளம்பரம்-

ஆடி வெள்ளி வழிபாட்டு பலன்கள்

ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால், குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில் மேன்மையும் ஏற்படும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் ‘கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி’ அன்று தேடிச்சென்று வழிபட வேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும். அதுமட்டுமல்ல திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வநிலை உயரும்.

இதனையும் படியுங்கள் : ஆடி மாதத்தில் விரதம் இருந்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுமா?