ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர். நல்ல மழை பெய்து ஆறுகள் புது வெள்ளம் பெருகி ஒடி வரும் இந்த நாளில் நாம் வாங்கும் பொருட்களால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. குடும்ப ஒற்றுமைக்காகவும் ஆடிப்பெருக்கு நாள் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்பட்டாலும், இது நீர் நிலைகளுக்க நன்றி தெரிவித்து, பூஜை செய்து, வழிபடும் நாளாக உள்ளது. கொங்கு மண்டலத்தில் இதை ஆடி நோம்பி என்றும் கொண்டாடுகிறார்கள். பொதுவாக இது சுமங்கலி பெண்கள் தாலிச்சரடு மாற்றிக் கொள்வதற்கான நாளாக மட்டுமே பலரும் கருதுகின்றனர். ஆனால் இது பெருக்கத்திற்கான மிக சிறப்பான நாளாகும். ஆடிப் பெருக்கு இந்த ஆண்டு எந்த நாளில் வருகிறது, இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
ஆடிப்பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது?
ஆடிப் பட்டம் தேடி விதை என்பது பழமொழி. சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் இருக்கக் கூடிய வெயில் காலம் முடிந்து ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்யத்துவங்கும். விளை நிலங்கள் விதைக்கப்படக் கூடிய அளவிற்கு புது வெள்ளம் ஆறுகளில் பெருகி வரும் இந்த புது வெள்ளத்தை வரவேற்கும் விதமாக ஆற்றங்கரையோரங்களில் கொண்டாடப்படுவதுதான் ஆடிப்பெருக்கு. ஆடி பதினெட்டாம் நாள் தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் நீருக்கு விழா எடுக்கும் நாள். காவிரி, வைகை, தாமிரபரணி பாயும் நதிக்கரையோர மக்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி நம்மை வாழ வைக்கு ஜீவ நதிகளை வணங்கும் நாள் ஆடிப்பெருக்கு நன்னாள்.
ஆடி பெருக்கின் சிறப்புகள்
ஆடிப்பெருக்கு நாளில் கன்னிப் பெண்கள் விரதமிருந்து வழிபட்டால் மனம் போல மாங்கல்யம் கிடைக்கும். நல்ல கணவர் கிடைப்பார் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கன்று புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை. குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க ஆடிப்பெருக்கு நாளில் காவிரி அன்னையை வழிபடுவார்கள். ஆடி மாதத்தில் சுப காரியங்கள் எதுவும் செய்யக் கூடாது என சொல்லுவார்கள். ஆனால் ஆடிப்பெருக்கு அன்று புதிய தொழில் துவங்குவது, திருமணம் போன்ற சுப காரிய பேசுக்களை துவங்குவது, நகை போன்ற வாங்குவது ஆகியவற்றை மக்கள் வழக்கமாக வைத்துள்ளார். காரணம் இந்த நாளில் எதை துவங்கினாலும் அது பெருகிக் கொண்டே போகும் என்பது ஐதீகம்.
ஆடி பெருக்கில் என்ன செய்யலாம்?
இந்த நாளில் துவங்கப்படும் செயல்கள் அனைத்தும் பெருகி, வளரும் என்பது ஐதீகம். அதனால் ஆடிப்பெருக்கு நாளில் திருமண பேச்சுக்கள், திருமணத்திற்கான ஏற்பாடுகள், திருமணத்திற்கு நகை வாங்குவது, புத்தாடை வாங்குவது, புதிய தொழில், கடை திறப்பது உள்ளிட்ட சுபகாரியங்களை செய்யலாம். ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றங்கரையில் மஞ்சளில் பிள்ளையார் செய்து, தேய்காய், பழம், சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடலாம். நதிகளுக்கு செல்ல முடியாதவர்கள் ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீர் பிடித்து, அதில் சிறிதளது மஞ்சள், சிறிது உப்பு சேர்த்து பூஜை அறையில் வைத்து, அவற்றை புனித நதிகளாக பாவித்து பூஜை செய்து வழிபடலாம். புதிதாக திருமணமான தம்பதிகள் ஆற்றில் சென்று நீராடி, கிழக்கு முகமாக நின்று, தங்களின் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, தங்களின் இல்லற வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் குறைவில்லாமல் பெருகி வர வேண்டும் என வேண்டி கொள்ளலாம்.
தாலி பெருக்கும் வைபவம்
பெரும்பாலும் திருமணமான மூன்றாவது மாதத்தில் இந்த வைபவம் நடக்கும். அதிலும் ஆடிப்பெருக்கன்று இதனை செய்வது சிறப்பு. புதியதாக திருமணம் ஆன தம்பதிகள் நதிக்கரையில் அன்று இரவு நிலாச்சோறு சாப்பிடும் பழக்கமும் உண்டு. அன்றைய தினம் பெண்கள், கோயில்களில் தாலி கயிறை மாற்றி புதிய தாலி கயிறு அணிவதுண்டு. திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும் என அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வர். அதுமட்டும் இன்றி திருமணம் ஆனவர்களும் இன்றுதான் தங்களது தாலி கொடியில் புது மஞ்சள் கயிற்றை மாற்றுவார்கள். அப்படி செய்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.
ஆடிப்பெருக்கு 2024
இந்த ஆண்டு ஆடிப் பெருக்கு விழா ஆகஸ்ட் 03ம் தேதி சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் மாலை 04.55 வரை சதுர்த்தசி திதியும், அதற்கு பிறகு அமாவாசை திதி துவங்கி விடுகிறது. இது முன்னோர் வழிபாட்டிற்குரிய ஆடி அமாவாசை தினம் ஆகும். சனிக்கிழமை என்பதால் காலை 9 முதல் 10.30 வரையிலான நேரம் ராகு கால நேரமாகவும், பகல் 01.30 முதல் 3 மணி வரையிலான நேரம் எமகண்ட நேரமாகவும் உள்ளது. அதனால் இந்த நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் ஆடிப் பெருக்கு வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : ஆடி முதல் செவ்வாயில் அம்மனை இப்படி வழிபடுங்க எவ்வளவு கடன் இருந்தாலும் அடைந்து விடும்!!