ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மட்டுமின்றி அனைத்து தெய்வங்களுக்கும் உரிய வழிபாட்டு மாதமாகும். இந்த மாதத்தில் வரும் மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்று ஆடி பெளர்ணமியாகும். பௌர்ணமி அன்று எண்ணற்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது குல தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்ற நாளாகும். தைப்பூசம், மாசி மகம், சித்ரா பெளர்ணமி, திருக்கார்த்திகை என ஒவ்வொரு மாதத்திலும் வரும் பெளர்ணமிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.
பொதுவாக சிவ பெருமான், அம்பாள் மற்றும் குல தெய்வ வழிபாட்டிற்கு ஏற்ற நாள் பெளர்ணமி ஆகும். இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. பௌர்ணமியில் மலை மீது பிரபஞ்ச சக்தி அதிகமாக இருக்கும். பெளர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது மிகவும் விசேஷமானதாகும். 2024ம் ஆண்டில் ஒவ்வொரு மாதத்திலும் வரும் பெளர்ணமி நாட்களின் தேதிகள் மற்றும் அந்த நாட்களில் எந்த நேரத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது ஏற்றதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பௌர்ணமி தினத்தின் மகத்துவம்
பெளர்ணமி என்பது முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்த நாளில், நல்ல அதிர்வலைகள் ஏற்படும். அப்பேர்ப்பட்ட சக்தி மிகுந்த நாளில், தேவி மற்றும் சிவ வழிபாடு செய்வது தீயசக்தியில் இருந்து நம்மைக் காக்கும். ஆடி பெளர்ணமி மட்டுமின்றி, சித்திரை, ஐப்பசி முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பெளர்ணமி திருநாளில் விரதம் இருந்து சிவனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு. அமாவாசை மற்றும் பௌர்ணமி என்பது ஆன்மீகத்தில் மட்டுமல்ல, அறிவியலிலும் மிகவும் முக்கியமான நாட்கள். இந்த இரு நாட்களிலும் விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு.
ஆடி பௌர்ணமி வழிபாடு
சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் அருணாசலேசுவரரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிப்பது எப்படிச் சிறப்பானதோ, அதே அளவு சிறப்பானது திருவண்ணாமலை கிரிவலம் வந்து வணங்குவது மிகவும் சிறப்பு. ஆடி பௌர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்பு பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கரு ஊமத்தம் பூ மாலை அணிவித்து, மூங்கில் அரிசி பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும். அதுமட்டுமல்லாமல் பெளர்ணமியில் சத்ய நாராயண பூஜை செய்து வழிபடுவதும் அனைத்து விதமான பாவங்களையும் போக்கி, அள்ள குறையாத செல்வங்களை அள்ளிக் கொடுக்கும். சித்திரை, கார்த்திகை, ஆடி, தை உள்ளிட்ட சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் பெளர்ணமி மிகவும் விசேஷமானதாகும்.
ஆடி பௌர்ணமியின் சிறப்புகள்
சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கக்கூடிய மாதம் ஆடி மாதம். ஆடி மாதம் இறைத்துவம் பொருந்திய மாதந்தகளில் ஒன்று. ஆடி அமாவாசை, ஆடி பூரம், ஆடி பெருக்கு என பல விசேஷங்கள் நிறைந்த இந்த ஆடி மாதத்தில் வரும் ஆடி பெளர்ணமியும் மிக விசேஷமாக பார்க்கப்படுகிறது. ஆடி மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி தினம் பொதுவாக உத்திராட நட்சத்திரம் வரும். இந்த ஆடி பெளர்ணமி தினம் சிவ பெருமானினை வழிபடுவதற்கான மிக உன்னத நாள். இந்த அற்புத நாளில் வீட்டில் விளக்கேற்றி சிவபெருமானை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் ஏற்படும். புண்ணியம் கிடைக்கும். அதோடு உத்தியோகஸ்தர்கள் நினைத்த பதவி கிடைக்கக்கூடும். இந்த நன்னாளில், குலதெய்வக் கோயில் அருகில் இருந்தால், சென்று வழிபட்டு வருவது நன்மைகளை வழங்கும். சந்ததியினர் சிறப்பாக வாழ்வார்கள்.
ஆடி பௌர்ணமி வழிபாட்டு முறை
ஆடி பெளர்ணமி திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். சர்வம் சிவமயம் என்று கூறும் சைவ மதத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் ஆடி மாதம் செய்யப்படும் சிவ அபிஷேகமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆடி அபிஷேகத்தினால் மனம் குளிரும் சிவ பெருமான் எல்லாவித நன்மைகளையும் கொடுப்பார். இந்த நாளில் மூங்கில் அரிசி பாயசம் நைவேத்தியம் படைத்து வழிபட்டால் எப்படிப்பட்ட பகையும் விலகி விடும் என்பது நம்பிக்கை. அதேபோல், ஞானக் கடவுளாம் ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பௌர்ணமி என்கிறது புராணம். எனவே ஆடி பௌர்ணமி நாளில், ஸ்ரீஹயக்ரீவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்; பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள்.
ஆடி பெளர்ணமி திருவண்ணாமலை கிரிவலம் நேரம்
கிரிவலம் செல்வதற்கு அனைத்து நாள்களுமே உகந்த தினம் என்றாலும் பௌர்ணமி தினத்தில் மேற்கொள்ளப்படும் கிரிவலத்துக்கு மற்ற தினங்களை விடவும் அதிகச் சிறப்பு உண்டு என்று கூறியிருக்கிறார்கள். இந்த ஆண்டு ஆடி பெளர்ணமியானது ஜூலை 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஜூலை 20ம் தேதி மாலை 06.10 மணி துவங்கி, ஜூலை 21ம் தேதி மாலை 04.51 வரை பெளர்ணமி திதி உள்ளது. ஜூலை 20ம் தேதி மாலை நேரம் பெளர்ணமி துவங்குவதால், ஜூலை 21ம் தேதியே ஆடி பெளர்ணமியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல விரும்பும் பக்தர்கள் ஜூலை 20ம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு கிரிவலத்தை துவங்கி, ஜூலை 21ம் தேதி மாலை 05.20 மணிக்கு முன்பாக நிறைவு செய்து கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : அருள் தரும் ஆடி மாதத்தில் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்