அமுக்கரா என்னும் அசுவகந்தா ஆண்மையை வளர்க்கும், மூட்டு வலி போக்கும், உறக்கம் தரும்!

- Advertisement -

அமுக்கரா சூரணம்… நாட்டுமருந்துக்கடைகளில் விற்கப்படும் இந்த அமுக்கரா மூலிகைப்பொடி பாக்கெட்டின்மீது ஆண்மையைப்பெருக்கும், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும், நரம்புத்தளர்ச்சியைப் போக்கும் என்று எழுதப்பட்டிருக்கும். இதைக்கண்டதும் இளம் வயது நண்பர்கள் தங்களுக்குள் கேலி, கிண்டல் செய்து கொள்வார்கள். உண்மையில் அமுக்கராவுக்கு அந்த சக்தி உண்டா? என்பதும் சிலருக்குள் ஒரு சந்தேகம் இருக்கும். உண்மையில் அமுக்கரா ஆண்மைக்கோளாறை மட்டுமல்ல பல்வேறு உடல்நலக்கோளாறுகளை சரிசெய்யக்கூடிய அற்புதமான மூலிகை என்று சொன்னால் மிகையாகாது.

-விளம்பரம்-


குதிரை பலம் கொண்ட அமுக்கரா


அமுக்கரா அல்லது அமுக்கிரா என்ற மூலிகைக்கு அசுவகந்தி, அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், அசுவகந்தம், இருளிச்செவி, வராககர்ணி, கிடிச்செவி என்ற வேறு பெயர்களும் உண்டு. வடமொழியில் அசுவகந்தா எனப்படும் இந்த மூலிகையில் அசுவம் என்றால் குதிரை என்றும், கந்தம் என்றால் கிழங்கு என்றும் பொருள்படும். அதாவது குதிரை பலம் கொண்ட கிழங்கு இது என்று சொல்லப்படுகிறது. இன்னும் வேறு சில பெயர்க்காரணங்களும் சொல்லப்படுகிறது. அமுக்கராவில் அதன் கிழங்குதான் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இட்லி அவிக்கும் பாத்திரத்தில் இட்லி அவிப்பதுபோல் அவித்து எடுக்கப்படுகிறது. நீருடன் பால் சேர்த்து அவித்து எடுக்கப்பட்ட பிறகே மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

- Advertisement -


விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும்


அமுக்கராவை தனி பொடியாகவும், வேறு சில பொருட்களுடன் சேர்த்தும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது பாலில் அவித்து எடுக்கப்பட்ட அமுக்கரா கிழங்குடன் சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு, ஏலக்காய், சிறுநாவற்பூ சேர்த்துப் பொடியாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அமுக்கரா சூரணம் சாப்பிடுவதால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் அவற்றின் தரம் அதிகரிக்க உதவும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் வேறு மருந்துகளை சாப்பிடுவதற்குமுன் அமுக்கரா சூரணத்தைச் சாப்பிட்டு பார்க்கலாம். அமுக்கரா சூரணத்தை பாலுடன் கலந்து சாப்பிட்டால் மனதை அமைதிப்படுத்தி ஆழந்த உறக்கத்தை உண்டாக்கும். அதேபோல் உடல் வலியால் அவதிப்படுவோரும் உடல் நலிவுற்று காணப்படுவோரும் அமுக்கரா பொடியுடன் பாதாம், பனங்கல்கண்டு சேர்த்து பாலில் கலந்து ஒரு ஊட்ட பானமாக எடுத்துக்கொள்ளலாம்.


காய்ச்சலுக்கு நல்லது


வயிற்றுப்புண், ரத்தசோகை, ஈரல் நோய்கள், நரம்புத்தளர்ச்சி, முதியோருக்கு வரக்கூடிய ஞாபகமறதி போன்ற பல்வேறுவிதமான நோய்களுக்கு அமுக்கரா சூரணம் நல்ல தீர்வை பெற்றுத்தருகிறது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் உடலுக்கு போதிய வலிமையை தருவதிலும் அமுக்கரா சூரணத்துக்கு முக்கிய பங்கு உண்டு. மூளை செல்களைத்தூண்டி புத்துணர்ச்சியூட்டும் அமுக்கரா சூரணத்தை விளையாட்டு வீரர்களும் அதிக உடல் உழைப்பு செய்வோரும் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், சிலர் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் சாப்பிடுவார்கள். அப்படியில்லாமல் ஒரு மண்டலம் (48 நாட்கள்) எடுத்துக்கொண்டு அதன்பிறகு தேவைக்கேற்ப சாப்பிடலாம். மூட்டு மற்றும் உடல் முழுவதும் வலியை உண்டாக்கும் சிக்குன் குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அமுக்கரா சூரணத்தை காலை, இரவு வேளைகளில் பாலில் கலந்து குடித்து வந்தால் நல்ல நிவாரணம் பெறலாம். சிக்குன் குன்யா காய்ச்சல் என்றில்லை, சாதாரணமாக வரக்கூடிய எந்தவிதமான காய்ச்சலுக்கும் அமுக்கரா சூரணம் நல்ல மருந்து.


மெனோபாஸ் காலத்தில் பெண்கள் சாப்பிடலாம்


மாத்திரை வடிவில் விற்கப்படும் அமுக்கரா சூரணத்தை 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பாலில் கலந்து சாப்பிடலாம். காலை மற்றும் இரவு வேளைகளில் இதைச் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். குழந்தை பெற்ற தாய்மார் தாய்ப்பால் ஊறுவதற்காக இந்த அமுக்கரா சூரண மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். மாதவிடாய் நிற்கக்கூடிய மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய உடல் மற்றும் மன பலவீனத்தில் இருந்து அவர்களை மீட்க உதவும். பொதுவாக மருத்துவம் என்று எடுத்துக்கொண்டால் உடல் நோய்களுக்கு தனியாகவும், மன நோய்களுக்கு தனியாகவும்தான் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், உடல் மற்றும் மன நோய் என இரண்டுக்கும் சேர்த்து கொடுக்கப்படும் சில மருந்துகளில் அமுக்கராவும் ஒன்று. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப்போல அமுக்கரா இருவேறு நோய் பாதிப்புகளையும் சரிசெய்யக்கூடியது.

-விளம்பரம்-


மூட்டுவலி விரட்டும்


மெலிந்த தேகம் உள்ளவர்கள் அமுக்கரா சூரணத்தைச் சாப்பிடலாம். அதற்காக உடல் பருமனாகி தொல்லை கொடுக்குமளவுக்கு இருக்காது. அவர்களுக்கு தேவையான ஊட்டத்தை பெற்றுக்கொடுக்கும், அவ்வளவே. சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்புகளில் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக உள்ளங்காலில் ஒருவித மதமதப்புத்தன்மை ஏற்படுவதுடன் காலில் எரிச்சல் உண்டாகும். அவற்றுக்கு அமுக்கரா சூரணம் தீர்வளிக்கும். புற்றுநோய் கட்டிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் அமுக்கராவுக்கு உண்டு. பொதுவாக கட்டி உள்ள இடங்களில் அமுக்கரா பொடியை நீரில் குழைத்து சூடாக்கி பூசிவந்தால் நிவாரணம் கிடைக்கும். முதியோரை பாதிக்கும் மூட்டுவலிக்கும்கூட அமுக்கரா சூரணம் சாப்பிடுவது நல்லது.


சூரணம் மாத்திரை லேகியம்


அமுக்கரா சூரணத்துக்கு அனுபானமாக பால் சேர்த்துச் சாப்பிட வேண்டும். அமுக்கரா சூரணம், மாத்திரை மற்றும் லேகியம் போன்ற வடிவங்களில் கிடைக்கிறது. மிக எளிதாகக் கிடைக்கும் இவற்றை நோயின் தன்மைக்கேற்ப மருத்துவர்களின் ஆலோசனை பெற்று உட்கொள்வது மிகவும் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here