நீர்முள்ளி… நீர்வளம் நிறைந்த பகுதிகளில் தானாக வளரக்கூடிய மூலிகைச் செடி இது. குளம், குட்டை, ஏரி மற்றும் வயல் வரப்புகள், ஓடைப்பகுதிகளில் செழித்து வளரக்கூடியது. பொதுவாக செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூ பூக்கக் கூடியது இந்த நீர்முள்ளி. தமிழகமெங்கும் பரவலாகக் காணப்படும் இந்த நீர்முள்ளி செடியானது விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்யக்கூடியது. இந்த செடி முழுவதையும் மருத்துவத்துக்காக பயன்படுத்தலாம்.
சிறுநீர்ப்பெருக்கி
சிறுநீரைப் பெருக்கி வியர்வையை அதிகப்படுத்தி உடலுக்கு ஊட்டம் தரக்கூடியது. நீர்முள்ளியின் விதைக்கு மட்டுமல்ல முழுச்செடிக்கும் மருத்துவ குணம் உண்டு. ஆனால் இந்த நீர்முள்ளி விதை லேசாக நீரில் பட்டாலும் அது கொழகொழப்பாக மாறிவிடும். இதனால்தான் சிலர் நீர்முள்ளி என்றதும் அதை சாப்பிட யோசிக்கின்றனர். ஆனால் நீர்முள்ளியில் நிறைய மருத்துவ குணம் இருக்கிறது என்பதால் அதை எப்படியாவது சிரமப்பட்டு உட்கொள்கின்றனர். சிறுநீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல், தலைவலி, காய்ச்சல் என பல பிரச்சினைகளை சரி செய்யக்கூடியது இந்த நீர்முள்ளி.
ஆண்மை அதிகரிக்கும்
ஆண்மைப் பெருக்கியாக செயல்படுவதில் நீர்முள்ளியின் பங்கு அதிகம். இன்றைக்கு ஆண்மைக் குறை பிரச்சினை உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அப்படிப்பட்டவர்கள் தங்களது பிரச்சினையை சரி செய்யவும், போதுமான எழுச்சி பெறவும் நீர்முள்ளி விதையை தனியாகவோ, வேறு சில மூலிகைகளுடன் சேர்த்தோ எடுத்துக் கொள்கின்றனர். நீர்முள்ளி விதையுடன் சம அளவு மாதுளை விதைப் பொடி சேர்த்து ஒரு ஸ்பூன் வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரித்து தாம்பத்தியம் சிறக்கும்.
தாம்பத்தியத்தில் ஆர்வம்
நீர்முள்ளி விதையுடன் முருங்கை விதை, தாமரை விதை, வெங்காய விதை சம அளவு சேர்த்து பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை சக்தி அதிகரிப்பதுடன் தாம்பத்தியத்தில் முழுமையாக ஈடுபட முடியும். நீர்முள்ளி விதையை தனியாக அரைத்து பசும்பால் சேர்த்துக் குடித்தாலும் பலன் கிடைக்கும். நீர்முள்ளி விதை 30 கிராம், பாதாம் பருப்பு, கசகசா தலா 10 கிராம் எடுத்து ஒரு மணி நீரில் ஊற வைத்துக் காய்ச்சி பாலுடன் கலந்து குடித்து வந்தால் தாது பலப்படும். தாம்பத்தியத்தில் மிகுந்த ஆர்வம் ஏற்படும். நீர்முள்ளியின் சமூலத்தை (முழுச்செடி) கசாயம் செய்து தினமும் குடித்து வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.
மலச்சிக்கல் சரியாகும்
சிறுநீரகக் கல் அடைப்பு உள்ளவர்கள் நீர்முள்ளி கசாயத்தை காலை, மாலை என அருந்தி வந்தால் கல் கரைந்து சிறுநீருடன் வெளியேறிவிடும். நீர்முள்ளியுடன் திரிபலா சூரணம் சேர்த்து கசாயம் செய்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும். வாயுக்களின் சீற்றத்தாலும், செரிமானக் கோளாறுகளாலும் ஏற்படக்கூடிய வயிற்றுப் புண்ணை குணப்படுத்தவும் இதன் இலைகளை கசாயம் செய்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய்க் கோளாறு மற்றும் வெள்ளைப்படுதலால் அவதிப்படும் பெண்கள் நீர்முள்ளி சமூலத்தை கசாயம் வைத்துக் குடித்து வந்தால் முழுமையான நிவாரணம் கிடைக்கும்.
உடல் மெலியும்
நீர்முள்ளி சமூலம் 200 கிராம் எடுத்து நன்றாகக் கழுவி அதனுடன் பெருஞ்சீரகம், நெருஞ்சில் விதை, தனியா தலா 50 கிராம் சேர்த்து நன்றாகச் சிதைத்து இரண்டு லிட்டர் நீர் சேர்த்து அரை லிட்டராகும் வரை நன்றாகக் காய்ச்ச வேண்டும். அதில் 125 மில்லி வீதம் ஒரு நாளைக்கு நான்கு வேளை குடித்து வந்தால் பருத்த உடல் வாகு கொண்டவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள். அத்துடன் வாதவீக்கம், கீல்வாதம், அழற்சி போன்றவை சரியாகும்.