தினமும் வெந்நீர் அருந்தினால் பலன்கள் அதிகம்!செரிமானம் சீராகும், கழிவு வெளியேறும், வலி விலகும்!

- Advertisement -

வெந்நீர் வைத்தியம்… இதைக்கேட்டதும் சிலபேருக்கு இது புதிய தகவலாகவும், வேறு சிலருக்கு ஏற்கெனவே அறிந்த, புரிந்த தகவலாகவும் இருக்கும். நாம் இங்கே சொல்லப்போகும் வெந்நீர் வைத்தியத்தில் சில தகவல்கள் பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன. அந்தவகையில் நாம் அன்றாடம் அருந்தக்கூடிய நீர் வெந்நீராக இருந்தால் அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், சித்த மருத்துவத்தில் மருந்துகள் சாப்பிடும்போது அனுபானமாக சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படும் வெந்நீர் குறித்தும் இந்தக்கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

-விளம்பரம்-

நீரைச் சுருக்கி மோரைப் பெருக்கி

மோர் பெருக்கி, நீர் சுருக்கி, நெய் உருக்கு உண்பவர்தம் பேர் சொல்லப்போகுமே பிணி’ என்று பிணி அணுகா விதி என்ற நூலில் தேரையர் சித்தர் இப்படி குறிப்பிட்டுள்ளார். அதாவது மோரை நீர் சேர்த்துக் கலந்து அளவைக்கூட்டியும், நீரைக் காய்ச்சி சுருங்கவைத்தும் அருந்த வேண்டும் என்று சொல்கிறார். அதேபோன்று நெய்யை உருக்கியபிறகே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். சித்த மருத்துவம் இதை மிகத்தெளிவாக கூறியுள்ளது. இந்த வழிமுறைகளைப் பின்பற்றினாலே நோய்கள் நெருங்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

- Advertisement -

கொதிக்க வைத்து ஆறிய நீர்

அருட்பெருஞ்ஜோதியான வள்ளலார் தினமும் வெந்நீரை மட்டுமே அருந்தி வந்திருக்கிறார். வெந்நீர் என்றால் நாம் அருந்துவதைப்போல மிதமான சூடு உள்ள நீரல்ல, கொதிக்கும் வெந்நீரை மிகச்சாதாரணமாக குடிப்பார். அதன்படி அவர் தினமும் கொதிக்கவைத்து ஆற வைத்து மிதமான சூடு உள்ள நீரையே அருந்த வேண்டும் என்று வலியுறுத்தினார். குடிப்பதற்கு மட்டுமல்ல குளிக்கவும் வெந்நீரையே பயன்படுத்த வேண்டுமென்கிறார். இதனால் தொற்றுநோய்களும் மற்ற பிற நோய்களும் நெருங்காது என்கிறார் வள்ளலார்.

நெஞ்சு கரித்தல் சரியாகும்

நீரைக் காய்ச்சிக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து சித்த மருத்துவத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பொதுவாக நம்மில் பலர் உடல்நிலை சரியில்லாத சூழலில்தான் வெந்நீர் அருந்துகிறோம். ஆக, உடல்நிலை சரியில்லாத சூழலில் வெந்நீர் அருந்துவதன்மூலம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. உதாரணமாக ஒன்றைச் சொன்னாலே வெந்நீரின் மகத்துவம் நமக்குத் தெரியவரும். வடை, போண்டா, பஜ்ஜி, பூரி போன்ற எண்ணெய்ப் பலகாரங்களையோ அல்லது கேக், சாக்லேட் போன்ற இனிப்புப் பண்டங்களையோ சாப்பிடும் சிலருக்கு நெஞ்சு கரிக்கும். அப்போது ஒரு டம்ளர் வெந்நீர் அருந்தினால் அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட்டு விடலாம். பைசா செலவின்றி பலன் தருகிறது வெந்நீர்.

மலச்சிக்கல் விலகும்

மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெந்நீரை குடித்தால் அதன் பலனை அனுபவிக்க முடியும். மேலும் உடலில் அதிகப்படியான கொழுப்பு உள்ளவர்கள், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் வெந்நீர் குடித்து வந்தால் பலன் கிடைக்கும். குறிப்பாக வெந்நீருடன் எலுமிச்சைசாறு மற்றும் தேன் கலந்து குடிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. இப்படிக் குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற சதைகள் சுருங்கிவிடும். அதுமட்டுமல்ல உணவு உண்டு முடித்ததும் வெந்நீர் அருந்தினால் கொழுப்புகள் சேரவிடாமல் பார்த்துக்கொள்ளும். மேலும் இதயம் சார்ந்த நோய்கள் வராமலும் பார்த்துக்கொள்ளும்.

-விளம்பரம்-

தலைவலிக்கு நல்லது

வீட்டை விட்டு வெளியே சென்று அலைச்சலுடன் வீடு திரும்பும்போது தலை வலிக்கும். அதேபோல் மழை, பனியில் நனைவதாலும் மூக்கு அடைத்துக்கொண்டு தலை வலிக்கும். அந்த நேரத்தில் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்தினால் தலைவலி பிரச்சினையிலிருந்து விடுபடலாம். சளி, இருமல், ஜலதோஷம் போன்ற தொந்தரவு இருப்பவர்களுக்கு வெந்நீர் நல்ல நிவாரணம் தரும். நொச்சி, வேப்பிலை, யூகலிப்டஸ் போன்றவற்றின் இலைகளை நீரில் போட்டு கொதிக்கவைத்து ஆவி (வேது) பிடித்தால் சளித்தொல்லையிலிருந்து விடுபடலாம். இலைகள் கிடைக்காதபட்சத்தில் வெறும் நீரைக் கொதிக்கவைத்து ஆவி பிடித்தால்கூட போதும்.

விரல் அழுக்குகள் நீங்கும்

கை, கால்களில் அழுக்கு சேர்ந்து சிலருக்கு தீராத வலி உண்டாகும். இதுபோன்ற நேரங்களில் சிலர் மருத்துவர்களை நாடிச்செல்வதும், அவர்களுக்குத் தெரிந்த சுயமருத்துவங்களை செய்தும் பார்ப்பார்கள். ஆனால், அதற்கெல்லாம் கட்டுப்படாத நிலையில் வெறும் வெந்நீரில் கை, காலை சில நிமிடங்கள் வைத்திருந்தாலே போதும், வலி விலகி ஓடிவிடும். விரல் இடுக்குகளில் அழுக்குகள் சேர்ந்திருப்பதால் ஏற்படக்கூடிய வலிகளுக்கு இந்த வெந்நீர் வைத்தியம் மிகச்சிறந்த தீர்வு தரும்.

உடல் வலி நீங்கி உறக்கம் வரும்

வேலைப்பளு, அலைச்சல் காரணமாக ஏற்படும் உடல்வலிக்கு வெந்நீர்க் குளியல் நல்லது. வெறும் வெந்நீராக இல்லாமல் நொச்சி, வேப்பிலை, மஞ்சணத்தி (நுணா), யூகலிப்டஸ் போன்ற இலைகளைப்போட்டு கொதிக்கவைத்துக் குளித்தால் வலி நீங்குவதுடன் நிம்மதியான உறக்கம் வரும். அத்துடன் வெந்நீரில் சிறிது சுக்குத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சூடாகக் குடித்தால் பித்தத்தால் வரக்கூடிய பாதிப்புகள் நீங்குவதுடன் காய்ச்சல் வருவதுபோன்ற நிலை இருந்தால் அதிலிருந்து விடுபடலாம்.

-விளம்பரம்-

கழிவுகள் வெளியேறும்

வெந்நீர் அருந்துவதால் செரிமான மண்டலம் சீர்பெறுவதுடன் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். வயிறு உப்புசம், வயிற்றுக்கோளாறுகள் இருந்தாலும், அவை ஏற்படாமல் தடுக்கவும் வெந்நீர் உதவும். பாலூட்டும் தாய்மார் மற்றும் கர்ப்பிணிகள் வெந்நீர் அருந்துவது மிகவும் நல்லது. வெந்நீர் அருந்த எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. எல்லா வயதினரும் வெந்நீர் அருந்தி நலம் பெறலாம்.

அனுபானமாக வெந்நீர்

சித்த மருந்துகள் சாப்பிடும்போது அனுபானமாக பால், மோர், தேன் என ஏதாவது ஒன்றுடன் சேர்த்துச் சாப்பிடப் பரிந்துரைப்பார்கள். அந்தவகையில் வெந்நீரையும் அனுபானமாக சேர்த்துக்கொள்ளச் சொல்வார்கள். உதாரணமாக கடுக்காய் அல்லது திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து குடிப்பதே நல்லது. மேலும் வெந்நீர் என்றதும் சிலர் கொதிக்கும் நீரை அருந்துகின்றனர். அது வேறு சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதால் வெதுவெதுப்பான நீரை அருந்துவதே நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here