தேன்… மருந்தாகவும், உணவாகவும் பயன்படக்கூடியது. தேனுக்கு அமிர்தம் என்ற பெயரும் உண்டு. மரம், செடி, கொடிகளில் உள்ள அமிர்தம் எனப்படும் மகரந்தத்தை தேனீக்கள் பருகி தனது உடலில் உள்ள பையில் சேகரித்து வைத்துக்கொள்வது இயல்பு. அது மாறுதலடைந்த பிறகு தேனீக்கள் உமிழ்ந்து தான் கட்டியுள்ள அறைகளில் சேர்த்து வைத்துக்கொள்ளும். அத்தகைய தேன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெடாது. அதன் உயிர் சக்தி வலிமையுடன் அப்படியே இருக்கும். தானும் கெடாது தன்னுடன் சேரும் எந்த பொருளையும் கெட்டுப்போக விடாது.
மனச்சோர்வு போக்கும்
தேனில் வைட்டமின் சத்துகளும், உலோக சத்துகளும் அதிகம் உள்ளன. மிக முக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட் எனப்படும் பாலிபீனால் இருப்பதால் அது மன அழுத்தம், மனச்சோர்வு, மனப்பதற்றம் மற்றும் மன உளைச்சலைப்போக்கி மனதுக்கு அமைதியைத் தரும். தேன் சாப்பிட்ட 5 மணி நேரத்தில் செரிமானமாகிவிடுவதால்தான் அதை அனுபானமாக கொடுக்கிறார்கள். அத்துடன் நமது உடலுக்கு உடனடியாக பலனைக் கொடுக்கிறது. குழந்தைகளுக்கு இருமல் வந்தால் தேனுடன் அதே அளவு எலுமிச்சைச் சாறு சேர்த்து குடிக்க கொடுத்தால் இருமல் சரியாகிவிடும்.
செரிமானக்கோளாறு
பார்லி அரிசி கஞ்சியின் தெளிந்த நீருடன் தேன் சேர்த்து குடிக்கக் கொடுத்து வந்தால் செரிமானக் கோளாறு, இருமல், தொண்டைப்புண் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்கள் சரியாகும். வயதானவர்களுக்கு வரக்கூடிய கோழையை அகற்றுவதற்கும், உடலில் வெப்பத்தை உண்டு பண்ணுவதற்கும், தெம்பு கொடுப்பதற்கும் தேன் நல்லதொரு நிவாரணியாகும்.
முகம் வசீகரமாகும்
பெண்களின் மார்பகக் காம்புகளில் வரக்கூடிய ரத்தக்கட்டு மற்றும் புண் போன்றவற்றுக்கு தேன் பூசி வந்தால் குணமாகும். முகத்தில் கருமை படர்தல் மற்றும் கோடு, புள்ளிகள் போன்றவை காணப்பட்டால் அதன் மீது தேனைத் தடவி வெந்நீரால் முகத்தைக் கழுவினால் குணமாகும். அத்துடன் முகமும் வசீகரமாகும். வலிப்பு நோயைப் போக்குவதில் தேன் பெரும்பங்காற்றுகிறது. வாய்நாற்றத்தைப் போக்குவதுடன் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்பாட்டுக்கும் தேன் கை கண்ட மருந்தாகும். குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கை நிறுத்தவும் தேனுக்கு நிகர் தேன் மட்டுமே. வயிற்றுவலியால் பாதிக்கப்படுவோருக்கு தொப்புளைச்சுற்றிலும் தேன் தடவினால் சரியாகிவிடும்.
சர்க்கரை நோய் புண்
தேன் இயற்கை இனிப்புள்ளது என்பதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். ரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சரி செய்யக்கூடியது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தேனிலுள்ள அமிலமானது தொற்றுநோய்க் கிருமிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தி இயற்கையாகவே புண்களை ஆற்றக்கூடியது. அதனால் சர்க்கரை நோயாளிகளின் காலில் வரக்கூடிய புண்களை ஆற்ற தேன் பயன்படுகிறது. அந்த இடத்தில் புதிய திசுக்கள் ஆரோக்கியமாக உற்பத்தியாகவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் தேன் பயன்படுகிறது.