உங்கள் வீட்டுச் சமையலில் இடம்பெறும் உப்பு கல்லுப்பா, இந்துப்பா?

- Advertisement -

உப்பில்லா பண்டம் குப்பையிலே… இது நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச பழமொழிதான். உப்பு இல்லாத சாப்பாட்டை சாப்பிட நமக்கெல்லாம் பிடிக்காது. அதேமாதிரி அளவுக்கு அதிகமா உப்பு சேர்த்தாலும் அதைச் சாப்பிட முடியாது. உப்பு அவசியந்தான். ஆனா, அளவோட சேர்த்துக்கிடணும். ஏன்னா… உப்புலயும் சில சத்துகள் இருக்கு. கடல் உப்பு அதாவது கல் உப்புல சோடியம், குளோரைடு, பொட்டாசியம்னு பல சத்துகள் இருக்கு. அதேமாதிரி இந்துப்புல பொட்டாசியம் குளோரைடு இருக்கு. இயற்கையாவே அயோடின் சத்து, இரும்பு, துத்தநாகம்னு சில நுண்சத்துகளும் இருக்கு. இத்தனை சத்து இருந்தாலும் உப்பை ஒரு உணவு மாதிரி சாப்பிட முடியாது. அதை மற்ற பொருள்களோட சேர்த்துத்தான் சாப்பிட முடியும்.

உப்பு சத்தியாகிரகம்

மனுசனோட வாழ்க்கைல உப்பும் முக்கியமானதுதான். 8 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே உப்பை பதப்படுத்தி பயன்படுத்தியிருக்காங்க. ருமேனியா நாட்டுல ஊற்றுத்தண்ணியை கொதிக்க வச்சி உப்பை பிரிச்செடுத்ததா வரலாறு இருக்கு. அதுக்கு அப்புறம் பல நாடுகள்ல உப்பு உற்பத்தி நடந்திருக்கு. அந்த காலகட்டத்துல உப்பை பரிசா கொடுக்குற வழக்கம் இருந்திருக்கு. ஒரு கட்டத்துல உப்புக்காக சண்டை, போர்கூட நடந்திருக்கு. ஏன் நம்ம நாட்டுலகூட உப்புக்கு வரி விதிச்சதை கண்டிச்சி காந்தியடிகள் நடத்துன உப்பு சத்தியாகிரகம் வரலாற்றுல முக்கியமான ஒண்ணு. அந்த அளவுக்கு உப்பு முக்கியமானது.

- Advertisement -

மாட்டு வண்டியில் உப்பு

ஒரு காலத்துல நம்ம ஊர்ல மாட்டு வண்டியில உப்பு வித்துட்டு வருவாங்க. ஆனா இன்னைக்கி பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்லாம் உப்பு விக்கிறாங்க. அப்பிடின்னா உப்பு ரொம்ப முக்கியமானதுதானே? உப்புல நிறைய வகைகள் இருக்கு. நமக்கெல்லாம் தெரிஞ்சது கல் உப்பும், டேபிள் சால்ட்டுன்னு சொல்ற தூள் உப்பும் மட்டுந்தான் தெரியும். இன்னும் சிலபேருக்கு இந்துப்பு தெரியும். நமக்கெல்லாம் தெரியாத எல்லோரும் பயன்படுத்தாத உப்புகள் நிறைய இருக்கு.

உப்பில் உள்ள வகைகள்

கல் உப்புன்னு சொல்ற கடல் உப்பு, டேபிள் சால்ட், இந்துப்பைத்தவிர பிளாக் சால்ட்டுனு சொல்லக்கூடிய கறுப்பு உப்பு, சீவல் உப்பு, சாம்பல் உப்பு, காலாநமக் உப்பு, கோஷர் உப்புன்னு நிறைய வகைகள் இருக்கு. ஆனா நாம எல்லோரும் பயன்படுத்தக்கூடிய கல் உப்புலயும், தூள் உப்புலயும் அயோடின் சேர்த்துதான் கொடுக்கிறாங்க. காரணம் என்னன்னா இன்னைக்கி சூழல்ல நிறைய பேருக்கு அயோடின் பற்றாக்குறை இருக்கிறதா சொல்றாங்க. அதனால இந்தமாதிரி அயோடின் சேர்த்த உப்பைத்தான் விக்கிறாங்க. அங்கொண்ணும் இங்கொண்ணுமா சிலபேர் நேரடியா விக்கிற கடல் உப்பும் கிடைக்குது.

-விளம்பரம்-

பூச்சி நெருங்காமலிருக்க உதவும்

இவ்வளவு சொன்னபிறகு உப்புகளோட நன்மையைப் பத்தியும் சொல்லியாகணுமே… நம்ம வீட்டை சுத்தம் பண்ணும்போது அந்த தண்ணியோட கொஞ்சம் உப்பு சேர்த்துக்கிட்டா ஈ, கொசு, எறும்புத்தொல்லை இருக்காது. இது எல்லாரும் ரொம்ப சாதாரணமா செய்யக்கூடிய ஒரு விஷயந்தான். இந்த மாதிரி செஞ்சா தேள், பூரான்னு சில விஷ பூச்சிகள் வராமலும் தடுக்கும். சில வீடுகள்ல செவிட்டுப்பாம்போட நடமாட்டம் இருக்கும். இதை சியான் பாம்பு இல்லன்னா செய்யான் பாம்புன்னு சொல்வாங்க. அது காதுக்குள்ள நுழைஞ்சா காது செவிடாகும்னு சொல்வாங்க. அந்த பாம்பு நடமாட்டம் உள்ள வீடுகள்ல மூலைப்பகுதியில உப்பை கொட்டி வச்சா அதோட நடமாட்டமே இருக்காது.

நல்ல முட்டையா கெட்ட முட்டையா

முட்டையை வேக வைக்கும்போது அதோட கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வச்சா முட்டையோட ஓடு உடையாம வேகும். அதுமட்டுமில்ல வெந்தபிறகு ஓட்டை பிரச்சினையில்லாம உரிச்செடுக்கலாம். நல்ல முட்டையா, கூமுட்டையான்னு பார்க்கிறதுக்கு ஒரு பாத்திரத்துல குளிர்ந்த தண்ணியையும் உப்பையும் சேர்த்து முட்டையை வைக்கணும். அது தண்ணிக்குள்ள மூழ்குனா நல்ல முட்டை, மிதந்தா கெட்டுப்போன முட்டைன்னு தெரிஞ்சிக்கிடலாம். ஆப்பிள்பழம், உருளைக்கிழங்கை வெட்டி வச்சா அது மேல காவி நிறத்துல ஒரு படிவம் வரும். அந்தமாதிரி ஆகாம இருக்கணுன்னா உப்புத்தண்ணியை அதுமேல தெளிச்சா நிறம் மாறாம இருக்கும்.

புத்துணர்ச்சி தரும் உப்பு

உப்போட நன்மைகளை சொல்லிக்கிட்டே போகலாம். கை, கால் விரல்ல அழுக்கு தேங்கியிருந்தா வலி எடுக்கும். அந்தமாதிரி நேரங்கள்ல வெதுவெதுப்பான தண்ணியில கல் உப்பைச் சேர்த்து விரல்களை வச்சா உடனடியா நிவாரணம் கிடைக்கும். பல்லுல மஞ்சள் கறை இருந்தா உப்பையும் பேக்கிங் சோடாவையும் சேர்த்து தேய்ச்சா கறை நீங்குறதோட பல் ஸ்ட்ராங்கா ஆகும். கண்கள் சோர்வா இருந்தா வெதுவெதுப்பான தண்ணியில உப்பு சேர்த்து அதுல ஒரு துணியை நனைச்சி கண்கள் மேல ஒத்தடம் கொடுத்தா புத்துணர்ச்சி கிடைக்கும். தேவையில்லாத பொருளையோ, விஷப்பொருளையோ சாப்பிட்டா உப்பு கலந்த தண்ணியை குடிச்சா வாந்தி வரும். ஒரு முதலுதவியா இதைச் செஞ்சி பலன் பெறலாம்.

கல் உப்பும் இந்துப்பும்

இன்னும் பல வகைகள்ல உப்பு மனுசனுக்கு பயன்பட்டாலும் அளவுக்கு அதிகமா சேர்த்துக்கிட்டா சிறுநீரகம் பாதிக்க வாய்ப்பிருக்கு, மன அழுத்தத்தை உண்டாக்கலாம். ரத்த அழுத்தத்தை அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கு. ஆனா சிலபேர் உப்பே இல்லாம சாப்பிடுறதை பழக்கமா வச்சிருக்காங்க. அதுவும் ஆபத்துதான். கல் உப்புல சோடியம் குளோரைடு அதிகமா இருக்கிறதால பொட்டாசியம் குளோரைடு உள்ள இந்துப்பை சேர்த்துக்கிடலாம். ஆனா, அதையும் தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. மருந்தை மருந்தாதான் பயன்படுத்தணும். இந்துப்பை வாரத்துல ஒருநாள் இல்லன்னா ரெண்டு நாள் சேர்த்துக்கிடலாம். உங்க உடம்புக்கு எந்த உப்பு தேவைங்கிறதை மருத்துவர்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டு பயன்படுத்துங்க. பிரச்சினை இல்லாம இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here