பணத்தால் அனைத்தையும் சாதிக்க முடியாது என்பார்கள். ஆனால் பணம் தான் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது. பணம் இருந்தால் பல விஷயங்களை மாற்றி விடலாம். பண வரவு அதிகரிக்காமல், செலவு மட்டும் அதிகரிக்கிறது என்ற கவலையில் இருப்பவர்கள் தான் அதிகம். பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், மாத கடைசியில் பற்றாக்குறை என்ற நிலையிலேயே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. வருமானத்தை பெருக்குவதற்கான வழிகள் தெரிந்தாலும் தெய்வீக அருள், நம்மை சுற்றி நேர்மறை ஆற்றல்கள் இருந்தால் மட்டுமே பணத்தை சேமிக்கவும், பெருக்கவும் முடியும். இப்படி பணம் தொடர்பான பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்கள் பணத்தை பெருகச் செய்வதற்கான எளிய வழிபாட்டை இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.

பணப் பிரச்சனைகள் தீர குபேர வழிபாடு
பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது. வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. என்ன தான் பணத்தை நோக்கி ஓடினாலும் அதனை சேமிக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் தான் அதிகம். வருமானம் பெருகுவதற்கும் சேமிப்பதற்கும் வழி இல்லையா என வருத்தப்படுபவர்கள் எளிய வழிபாட்டின் மூலம் தீர்வை பெற முடியும். அந்த வழிபாடு தான் குபேர வழிபாடு. குறைவில்லாத செல்வம் வளம், சுகமான நிம்மதியான வாழ்வு ஆகியவற்றை பெறுவதற்கு மகாலட்சுமி, சுக்கிர பகவான் ஆகியோரின் அருளுடன், குபேரரின் அருளையும் பெற வேண்டியது அவசியம். சில குறிப்பிட்ட முறையில் வீட்டிலேயே எளிமையாக வழிபாடு செய்தால் குபேரரின் அருளை பெற முடியும். இந்த ஒரு வழிபாட்டினை மட்டும் தவறாமல் தொடர்ந்து செய்து வாருங்கள். நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சியை நீங்களே பார்ப்பீர்கள்.
குபேர வழிபாட்டிற்கு உகந்த நாள் மற்றும் நேரம்
உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் கொடுத்து உதவியவர் என குபேரரை சொல்லுவது உண்டு. இவரை வழிபடுபவர்களின் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி, வளர்ச்சி ஆகியவற்றிற்கு குறைவு என்பதே இருக்காது. செல்வத்தின் அதிபதியாக திகழும் குபேரனை வழிபடுவதற்கு ஏற்ற நாளாக வியாழக்கிழமை கருதப்படுகிறது. குபேர வழிபாட்டினை செய்வதற்கு மிக மிக ஏற்ற நட்சத்திரங்கள் பரணி, பூரம், பூராடம் ஆகியவை தான். தினமும் மாலை 6 முதல் 8 மணிக்குள் குபேர வழிபாடு செய்வது விரைவான பலன்களை கொடுக்கும்.
குபேர வழிபாட்டு முறை
இந்த வழிபாடு செய்வதற்கு வியாழக்கிழமையே வீட்டை சுத்தம் செய்து கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று வரும் சுக்கிர ஹோரையில் பூஜையறையில் இருக்கும் குபேரர் படத்திற்கு முன் ஒரு நெய் விளக்கு ஏற்றி வையுங்கள். பின் ஒரே மாதிரி ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயங்கள் 108 எடுத்துக் கொள்ளுங்கள். குபேரனுக்கு நெல்லிக்காய் படைத்து வழிபடுவது சிறப்பு அல்லது பஞ்சாமிர்தத்தை நைவேத்தியமாக படைக்கலாம். அதன்பிறகு குபேரனின் 108 நாமங்களை ஒவ்வொன்றாக கூறும் போது எடுத்து வைத்த ஒவ்வொரு ரூபாய் நாணயத்தை அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அர்ச்சனை செய்த நாணயங்களை செலவு செய்து விடாமல் தனியாக எடுத்து வைத்து இதே போல் 108 நாட்கள் அர்ச்சனை செய்து வழிபட்டு வர வேண்டும். 108 நாட்கள் தொடர்ந்து வழிபாடு செய்து வழிபாட்டினை நிறைவு செய்த பின் அந்த 108 நாணயங்களையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி, வியாபாரம் செய்யும் இடத்திலோ அல்லது வீட்டில் பணம் வைக்கும் இடத்திலோ வைத்து விட வேண்டும் இதனால் படிப்படியாக செல்வ நிலை உயர்ந்து கொண்டே இருக்கும். இவ்வாறு தொடர்ந்து வழிபட்டு வந்தால் நமக்கு குபேரரின் அருள் கிடைத்து குடும்பத்தில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதனையும் படியுங்கள் : இந்த ஒரு தீபத்தை மட்டும் உங்கள் வீட்டில் ஏற்றி வையுங்கள் பண வரவு அதிகரிக்கும்!!


