ஆடி அமாவாசை இந்த ஆண்டு ஆகஸ்ட் 04ம் தேதி வருகிறது. இந்த ஆண்டு வரும் அமாவாசைக்கு இரண்டு விதமான சிறப்புகள் உண்டு. ஒன்று, பித்ருக்களுக்கு உரிய கிரகமான சூரிய பகவானுக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் ஆடி அமாவாசை வருவது. மற்றொன்று, கர்மகாரகன் என சொல்லப்படும் சனீஸ்வர பகவானுக்கு உரிய பூசம் நட்சத்திர நாளில் இணைந்து வருகிறது. இதனால் இது மிக முக்கியமான அமாவாசையாக கருதப்படுகிறது. இந்துக்களின் சாஸ்திர முறைப்படி, அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கு உரிய நாளாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு விரதம் கடைபிடிப்பது மட்டுமின்றி காகத்திற்கு உணவு வைப்பதற்கும் சில முறை உள்ளது. அதனை பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
ஆடி அமாவாசை 2024
மாதந்தோறும் அமாவாசை தினம் வந்தாலும், ஆண்டுதோறும் வருகின்ற ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை மாத அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்கள் பிரசித்தி பெற்றவை. வழக்கமாக வரும் அமாவாசைகளில், தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், ஆடி அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபட்ட புண்ணியம் வந்து சேரும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு தந்தை வழி உறவுகளுக்கு காரணமான கிரகமான சூரியனுக்குரிய ஞாயிற்றுக்கிழமையிலும், கர்மகாரகன் என சொல்லப்படும் சனி பகவானுக்குரிய பூசம் நட்சத்திரத்திலும் இணைந்து ஆகஸ்ட் 04ம் தேதியான இன்று ஆடி அமாவாசை வருவதால் இது தனிச்சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை திதி ஆகஸ்ட் மாதம் மாலை 5 மணிக்கு தொடங்கி மறுநாள் 4ஆம் தேதி மாலை 5.32 மணி வரை இருப்பதால், ஆகஸ்ட் 4ஆம் தேதி முழுவதும் நீங்கள் திதி கொடுக்கலாம்.
காகத்திற்கு சாதம் வைப்பதன் முக்கியத்துவம்
ஆடி அமாவாசை என்பது நம் முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசியைப் பெறும் சிறப்பு நாள். இந்த நாளில் காகத்திற்கு உணவு வைப்பதற்கு பின்னால் பல ஆழமான அர்த்தங்கள் உள்ளன. காகம் சனி பகவானின் வாகனமாகக் கருதப்படுகிறது. சனி பகவான் நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப நமக்கு பலன்களைத் தருபவர். காகம் சனியின் தூதுவராக கருதப்படுவதால், காகத்திற்கு உணவு கொடுப்பது மூலம் நம் முன்னோர்களுக்கே நாம் பூஜைகள், தர்ப்பணங்கள் போன்றவற்றை செய்த பலன்களை பெறலாம்.
ஆடி அமாவாசையில் காகத்திற்கு சாதம் வைப்பதன் சிறப்பு
ஆடி அமாவாசை அன்று நம் முன்னோர்கள் பூமிக்கு வருகை தருவதாக நம்பப்படுகிறது. அவர்கள் சனிபகவானின் வாகனமான காகத்தின் உருவத்தில் பூமிக்கு வருகை தருவதாக நம்பப்படுகிறது. அதனால் தான் நாம் காகத்திற்கு உணவு கொடுத்து அவர்களை வரவேற்கிறோம். இதனால் அவர்கள் மனமும், வயிறும் குளிர்ந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்பது நம்பிக்கை. அவர்களின் ஆசியால் தான் நாம் நிம்மதியாக வாழ முடிகிறது. அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் தினசரி காகத்திற்கு உணவளிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
காகத்திற்கு என்ன உணவு வைக்கலாம்?
நாம் முன்னோர்களாக கருதும் காகத்திற்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்ற சமைத்த உணவுகளை வழங்கலாம். அல்லது வாழைப்பழம், மாம்பழம் போன்ற பழங்களை வழங்கலாம். இல்லையெனில் அரிசி, கோதுமை போன்ற தானியங்களை வழங்கலாம். இதை தினமும் செய்ய முடியவில்லை என்றால் அமாவாசை மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் முன்னோர்களின் பெயரைச் சொல்லி அவர்களுக்கு எள்ளும், தண்ணீரும் வைத்துப் படைக்க வேண்டும்.
காகத்திற்கு உணவு வைப்பதன் பலன்கள்
நம்முடைய முன்னோர்கள் இறந்த பிறகு அவர்களுடைய ஆன்மாக்கள் அவர்கள் குடும்பத்தைக் காண வசித்த இடத்தைத் தேடி வரும் என்பது நம்பிக்கை. அப்போது, நேரடியாக வராமல் காகத்தின் ரூபத்தில் வருவதாகக் கூறப்படுகிறது. நம் முன்னோர்களை நினைத்து அமாவாசை தினத்தில் ஒரு பிடி சாதம் காக்கைக்கு வைக்க வேண்டும். காகத்திற்கு உணவு வைப்பதால் கணவன்-மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும். காகம் சனீஸ்வர பகவானின் வாகனம் என்பதால் காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்தும் விடுபடலாம். இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம். காகத்திற்கு உணவு வைப்பதால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைப்பதோடு, சுற்றுப்புறமும் சுகாதாரமாக இருக்கும், சனிபகவானின் அருளும் கிடைக்கும்.
காகத்திற்கு உணவு வைக்கும் முறை
ஆடி அமாவாசை அன்று செய்யப்படும் சமையலில் வாழைக்காய் கண்டிப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக முன்னோர்களுக்கு விருப்பமான உணவுகளை அன்று செய்து, வாழை இலையில் வைத்து காகத்திற்கு வழங்க வேண்டும். நம் முன்னோர்களுக்கு பிடித்த உணவுடன் எள், நெய் கலந்த சாதத்தை காகத்திற்கு வைப்பதால் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். நாம் காகத்திற்கு உணவு வைக்கும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும். ஆடி அமாவாசையான இன்று காகத்திற்கு உணவு வைப்பவர்கள் சூரியனை சாட்சியாக வைத்து, உச்சிப் பொழுதில் உணவு வைக்க வேண்டும். அப்படி அளிப்பதால் வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும் என்பது நம்பிக்கை.
இதனையும் படியுங்கள் : ஆடி அமாவாசை அன்று குலதெய்வத்தை இப்படி வழிபடுங்க குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும்!!