பற்களின் ஆரோக்கியம் காக்கும் அற்புத மூலிகை பொருட்கள் ஆலம் விழுது, கடுக்காய், நுணா காய்!

- Advertisement -

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இந்தப் பழமொழியில் சொல்லப்பட்டிருப்பதுபோல ஆல் என்பது ஆலம் விழுது, வேல் என்பது கருவேலங்குச்சியை கொண்டு பல் துலக்கினால் பற்கள் உறுதிபெறும் என்பதே அதன் பொருள். நாலும் இரண்டும் என்பதில் நால் என்பது நாலடியார், இரண்டு என்பது திருக்குறள். இங்கே நமக்குத் தேவையானது ஆலும் வேலும்… இவற்றைக்கொண்டு பல் துலக்குவதால் பற்கள் உறுதிபெறும். இங்கே நாம் குறிப்பிட்ட வேலும் என்ற வேலங்குச்சிக்குப் பதில் வேப்ப மரத்தின் குச்சியையும்கூட பல் துலக்குவதில் தவறில்லை.

-விளம்பரம்-

ஆலம் விழுது வேலங்குச்சி

இயற்கைப்பொருள்களை, மரக்குச்சிகளை கொண்டு அன்றைக்கு பற்களை சுத்தம் செய்தார்கள். அதனால் எந்தக்கேடும் நிகழவில்லை. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொண்டதுடன் நோய்கள் நெருங்காமல் பார்த்துக்கொண்டார்கள். ஆலம் விழுது, கருவேலங்குச்சி மற்றும் வேப்ப மரத்தின் குச்சிகளோடு நின்றுவிடாமல் இன்னும் ஏராளமான பொருள்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர். 20 வருடங்களுக்கு முன்புவரை அடுப்புக்கரியை பயன்படுத்தி பல் துலக்கினர். நெல் உமியை எரித்து அதன் சாம்பலைக்கொண்டு பல் துலக்கினார்கள். அந்தச் சாம்பலுடன் சிறிது கல் உப்பைச் சேர்த்துப் பொடியாக்கி பயன்படுத்தினார்கள். செலவில்லாத அந்த பல் துலக்கிகளால் யாருக்கும் எந்தக்கேடும் இல்லை.

- Advertisement -

நாயுருவி வேர்

நாயுருவி வேரைக்கொண்டு பல் விளக்கினால் அழுக்குகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் முகம் அழகு பெற்று ஒரு வசீகரத்தன்மை ஏற்படும். முன்பெல்லாம் இப்படித்தான் இயற்கை அழகுடன் காணப்பட்டார்கள். ஆனால், இன்றைக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான ரசாயன கிரீம்கள் சந்தைக்கு வந்து மக்களுக்கு புதுப்புது நோய்களை ஏற்படுத்திச் செல்கின்றன. கல்லுப்பும், கரித்தூளும் சேர்த்து பல் துலக்கி வந்த நம்மை மடைமாற்றிவிட்டு இன்றைக்கு உங்கள் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா? என்று கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்ஸ்டன்ட் உலகமாகிவிட்டதால் கையில் கிடைத்ததை வாங்கி பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவற்றால் நமக்கு ஏற்படக்கூடிய நோய்களைப் பற்றி கவலையின்றி இருக்கிறோம்.

கடுக்காய், மாசிக்காய்

கடுக்காய்ப்பொடி, மாசிக்காய் பொடி அல்லது திரிபலா பொடியைக்கொண்டு பல் துலக்கலாம். கடுக்காய், மாசிக்காய் மட்டுமல்ல திரிபலா பொடியில் சேரக்கூடிய நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் போன்றவற்றை நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கி நாமே தயாரித்து பயன்படுத்தலாம். இவற்றால் எந்தக்கேடும் நிகழப்போவதில்லை. இந்த காய்களை பயன்படுத்துவதன்மூலம் உமிழ்நீர் வழியாக அவை குடலுக்குள் சென்று செய்யப்போகும் கூடுதல் செயல்களே அதிகம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? மாசிக்காய் வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை ஆற்றக்கூடியது. அதேபோன்றுதான் மற்ற காய்களும் பலவிதமான தொந்தரவுகள் வராமல் பார்த்துக்கொள்ளும். உணவு செரிமானத்துக்கும்கூட அவை உதவும்.

மஞ்சணத்தி காய்

மஞ்சணத்தி எனப்படும் நுணா காய்களைப் பயன்படுத்தி அற்புதமான பல்பொடியை நாமே தயாரிக்கலாம். சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் அந்த மரங்களின் காய்களை பறித்து துண்டு துண்டாக நறுக்கி உப்பு சேர்த்து அரைத்து வெயிலில் காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு மீண்டும் அதை அரைத்து தூளாக்கி வைத்துக்கொண்டால் பற்களுக்கு எந்தச்சேதாரத்தையும் ஏற்படுத்தாத பல்பொடி தயாரர். நமக்கு நாமே திட்டம்போல நாமே தயாரித்துக்கொள்ளலாம். இதில் தொழில்நுட்பங்கள் எதுவும் இல்லை. மிக எளிதாக நாமே தயாரித்துவிட முடியும். நுணா மரங்களை அடையாளம் காண்பது மட்டுமே உங்கள் வேலை.

-விளம்பரம்-

இயற்கை பல்பொடி

இவை அல்லாமல் இன்னும் சில பொருள்களைக்கொண்டு நீங்கள் மூலிகை பல்பொடி தயாரிக்கலாம். ஏற்கெனவே சொன்ன கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய், மாசிக்காய் மட்டுமல்லாமல் உலர வைத்த புதினா இலை, வேப்பம்பட்டை, நொச்சிக்குச்சி, புங்கம்பட்டை அல்லது குச்சி, ஓமம், லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு மற்றும் இந்துப்பு அல்லது கல்லுப்பு போன்றவற்றைச் சேர்த்து அரைத்து பொடியாக்கி வைத்துக்கொள்ளலாம். இவற்றைக்கொண்டு பல் துலக்கினால் பல் ஈறுகள் பலம் பெறுவதுடன் வாய் நாற்றம் நீங்கும். பற்களின் ஆரோக்கியத்துக்கு முழு உத்திரவாதம் கிடைக்கும். இயற்கை பொருள்களைக்கொண்டு நீங்களே தயாரிக்கும் இந்த பல்பொடியின் பலனை நீங்கள் உணரமுடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here