சளி, காய்ச்சல், ஆஸ்துமாவை விரட்டும் வெண்டைக்காய்!

- Advertisement -

வெண்டி அல்லது வெண்டைக்காயானது மல்லோ என்று அழைக்கப்படும் மால்வேசிய குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது சளி, காய்ச்சலைத் தடுப்பதுடன் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால், அதன் வழவழப்புத்தன்மையைப் பார்த்ததும் பலர் அதை விரும்புவதில்லை. வெண்டைக்காயில் உள்ள பெக்டின் மற்றும் கோந்துத்தன்மையே அதிலுள்ள வழவழப்புத்தன்மைக்கு முக்கியக் காரணமாகும். இதில் கரையும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். மேலும் கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் பார்த்துக்கொள்ளும். வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து நிறைந்த கோந்துப்பொருளானது உணவு செரிமானதும் கரையா நார்ச்சத்தாக மாறி குடலை பாதுகாப்பதுடன் மலக்குடலில் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்.

-விளம்பரம்-


லேடிஸ் ஃபிங்கர்


மருத்துவ குணம் நிறைந்த வெண்டைக்காயை லேடிஸ் ஃபிங்கர் என்று அழைப்பார்கள். பெண்களின் விரலைப்போன்று வெண்டைக்காய் மென்மையாக இருப்பதால் அப்படி அழைக்கப்பட்டாலும் பெண்களைவிட ஆண்களுக்குத்தான் பல்வேறு நலன்களை அள்ளித்தருகிறது. ஆண்மை பலத்தை அள்ளித்தரும் சிறப்பு வெண்டைக்காய்க்கு உண்டு. குறிப்பாக வெண்டைச்செடியின் வேரில் அந்த சக்தி அதிகமாகவே உள்ளது. ஆயுர்வேத இலக்கியத்தின் கூற்றுப்படி வெண்டைக்காயின் வேர் பாலியல் வீரியம் இழந்தவர்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகிறது. வெயிலில் காய வைத்து எடுத்த வெண்டைக்காய் வேரை பொடியாக்கி அதில் 5 அல்லது 10 கிராம் அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தாம்பத்திய உறவில் அதீத ஈடுபாடு ஏற்படும். மிக முக்கியமாக விந்து உற்பத்தியை அதிகரித்து ஆண்மை பலத்தைக் கூட்டும்.

- Advertisement -


அமெரிக்காவில் ஓக்ரா வாட்டர்


வெண்டை வேர் மட்டுமல்லாமல் அதன் காயில் மசியல், பொரியல், மோர்க்குழம்பு என பலவழிகளில் சமைத்துச் சாப்பிட்டு வரலாம். இரவில் வெண்டைக்காயை துண்டு துண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் நீரூற்றி அதில் போட்டு ஊற வைத்து காலையில் எழுந்ததும் அருந்தலாம். வெண்டைக்காய் ஊறிய இந்த நீரை ஓக்ரா வாட்டர் என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த ஓக்ரா வாட்டரை பலரும் விரும்பி அருந்துகிறார்கள். வெண்டைக்காயை சிறு துண்டுகளாக்கி நீரில் ஊறவைப்பதால் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த அற்புத மருந்துப்பொருளாகிறது. இது உடலை குளிர்ச்சிப்படுத்துவதுடன் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்யும். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி போன்றவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையடைய செய்யும். சளி, காய்ச்சல் வராமல் பாதுகாத்துக்கொள்ளும். ஆஸ்துமா மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும்.


வெண்டைக்காய் சூப்


வெண்டைக்காயில் சூப் செய்து அருந்துவது மிகவும் நல்லது. சளி, இருமலால் அவதிப்படுபவர்கள் முற்றிய வெண்டைக்காயுடன் தக்காளி, மூன்று பூண்டுப்பற்கள், சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டி உப்பு சேர்த்துக் குடிக்கலாம். மழை மற்றும் குளிர்காலங்களில் இந்த வெண்டைக்காய் சூப் செய்து குடித்து வந்தால் சளித்தொல்லையிலிருந்து விடுபடலாம். இனிமேல் வெண்டைக்காய் குளிர்ச்சித்தன்மை உடையது என்று அதை ஒதுக்காமல் இதுபோன்ற வழிகளில் எடுத்துக்கொண்டால் மழைக்கால நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். பொதுவாக எந்தவொரு நோயையும் முன்கூட்டி தடுத்துக்கொள்வது நல்லது. சளியும் காய்ச்சலும் நீடிக்கும்பட்சத்தில் அது வேறு சில நோய்களுக்கு இழுத்துச் செல்லலாம் என்பதால் கவனம் தேவை. இதுபோன்ற இயற்கை வழிகளில் `உணவே மருந்து; மருந்தே உணவு’ என்ற அடிப்படையில் தற்காத்துக்கொள்ளலாம்.


மூளைக்கு ஆரோக்கியம்


சிறுவயதில் குழந்தைகளை வெண்டைக்காய் சாப்பிட வைப்பதற்காக வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று சொல்லக் கேட்டிருப்போம். உண்மையில் வெண்டைக்காயை சமைத்துச் சாப்பிடுவதால் மூளை வளர்ச்சியடையும். நினைவுத்திறன் அதிகரிக்கும். சிறுவர்களுக்கு மட்டுமல்ல வயதானவர்களுக்குத்தான் ஞாபக மறதி ஏற்படும். எனவே அவர்கள் அவசியம் வெண்டைக்காய் சாப்பிட வேண்டும். மூளையின் ஆரோக்கியத்துக்கு உதவுவதுடன் அறிவாற்றல், கற்றல் மற்றும் நினைவகத்தை மேம்படுத்தவும் உதவும். டிமென்ஷியா எனப்படும் அல்சைமர் நோய்க்கு வெண்டைக்காய் சிறப்பான தீர்வு தரும். கண்களுக்கு போதிய பாதுகாப்பளிப்பதுடன் கண்புரை நீங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆகவே, வெண்டைக்காயை ஏதாவது ஒருவகையில் அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here