ஜோதிடத்தில் ராசிபலன் பார்க்கும்போது பலரும் கவனிக்கும் அம்சங்களில் ஒன்று சந்திராஷ்டமம் ஆகும். நவகிரகங்களில் சூரியன் மற்றும் சந்திரனின் அடிப்படையிலேயே நம்முடைய ஜாதகம் மற்றும் பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. இந்த இரு கிரகங்களின் நகர்வுகளை பொறுத்தே நம்முடைய உணர்வுகள் மற்றும் உறவுகள் அமையும். சந்திராஷ்டமம் என்றால், அன்றைக்கு எதிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

புதிய முயற்சிகளிலும் ஈடுபடக்கூடாது என்று கூறுவார்கள். அதற்குக் காரணம், ஒருவருடைய மனதுக்கு அதிபதி சந்திரன். அவர் ஒரு ராசிக்கு எட்டாவது வீட்டில் மறைவு பெற்றிருக்கும் போது, மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். சந்திராஷ்டமம் என்றால் கவனமாக இருக்க வேண்டும் என அனைவருக்கும் தெரியும். ஆனால் சந்திராஷ்டமம் என்றால் என்ன? இந்த நாளில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பலருக்கும் தெரியாது ஆகையால் இந்த ஆன்மீகப் பதிவில் அது குறித்து பார்க்கலாம்.
சந்திராஷ்டமம் என்றால் என்ன?
சந்திரன் என்றால் மதி என்று சொல்வார்கள். மதி என்றால் அறிவு என்றும் தமிழ் சொல்கிறது. ஆதிகாலம் தொட்டே சந்திரனும் மனநிலையும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தப்பட்டு வந்துள்ளது என ஜோதிட சாஸ்திரங்கள் சொல்லி வருகின்றன. சந்திராஷ்டமம் என்றால், சந்திரன்+அஷ்டமம் = சந்திராஷ்டமம். சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் எட்டாவது ராசியில் இருக்கிறார் என்பது அர்த்தம். ஒவ்வொருவரின் ராசிக்கும் எட்டாவது ராசியில் சந்திரன் இருந்தால் அந்த நாள் சந்திராஷ்டமம். உதாரணமாக மேஷ ராசிக்கு, விருச்சிக ராசி எட்டாவது ராசி. விருச்சிக ராசிக்குரிய நட்சத்திரங்களின் பாதங்களில் அதாவது விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகியவற்றில் சந்திரன் இருக்கும்போது, மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம். 12 ராசிகளுக்கும் இவ்வாறு சந்திரன் இடம் பெயர்ந்து அவரவர்களுக்கான சந்திராஷ்டம நாளில் செயல்களை மந்தமாக்குகிறார். இதனாலேயே மனிதர்களின் ஒவ்வொரு நாளிலும் சந்திரனின் ஆதிக்கம் உள்ளது என்று ஜோதிடம் தெரிவிக்கிறது. சம்பந்தமே இல்லாமல் ஒருநாள் உற்சாகமாக இருப்பதும், தேவையே இல்லாமல் ஒருநாள் சோர்வாக இருப்பதும்கூட சந்திரனின் தாக்கத்தால்தான் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
சந்திராஷ்டம நாளில் திருமணம் செய்யலாமா ?
நம் ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொருவருடைய ஜனன கால ஜாதகமும் சந்திரனை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுகிறது. சந்திரன் ஒருவரின் எட்டாவது ராசிக்கு உரிய இரண்டேகால் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் அந்த சந்திராஷ்டம நாட்களில் நல்ல காரியங்கள் அதாவது திருமணம், பெண் பார்த்தல், வேலையில் சேருதல் போன்ற சுப நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது. திருமணத்திற்கு பத்து பொருத்தம் பார்ப்பது எவ்வளவு அவசியமோ அதே போல முகூர்த்தம் குறிக்கும் நாள் சரியான நாளாக இருப்பது அவசியமாகும்.
சந்திராஷ்டம நாளில் என்ன செய்யலாம்?
சந்திராஷ்டம நாளில் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்வது நல்லது. சந்திராஷ்டம நாளில் எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன் குலதெய்வத்தையும், முன்னோர்களையும், இஷ்டதெய்வத்தையும் வணங்கிவிட்டு ஆரம்பிப்பது நன்மை தரும். இப்படிச் செய்தால் காரியத்துக்கு எந்தத் தடையும் வராது. அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம். இப்படிச் செய்தால் காரியத்துக்கு எந்தத் தடையும் வராது. சந்திராஷ்டம நாள் என்று உங்களால் முடிந்த வரை ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். எந்த உதவியாக இருந்தாலும் சரி, ஒரே ஒரு ஊனமுற்றவர்களுக்கு அந்த உதவியை செய்து விடுங்கள். சந்திராஷ்டம நாளில் ரசகுல்லா சாப்பிட தோஷம் நீங்கிவிடும். அதேபோல சந்திராஷ்டம நாளில் கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக்கொள்ளலாம் பாதிப்பு குறையும்.
சந்திராஷ்டம நாளில் செய்ய கூடாதவை

நீண்ட பயணங்கள், புதிய பொருள்களை வாங்குவது கூட அந்த நாளில் செய்யக் கூடாது. மன உளைச்சல், குழப்பம், மந்தம், பொறுமையின்மை, ஆத்திரம், எரிச்சல், கோபம், இவையெல்லாம் கூடிவரும் சந்திராஷ்டம நாளில் எந்த முக்கிய செயலையும் செய்ய வேண்டாம் என்பது ஜோதிடம் சொல்லும் ஒரு சூட்சும காரணம். ஒருவருக்கு சந்திராஷ்டம நாளில் தாயுடன் கருத்துவேறுபாடு, தாய்வழி உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் போன்ற பலன்களும் ஏற்படும். எனவே அந்த நாளில் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். வீண் வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது.
சந்திராஷ்டமம் செய்யும் நன்மைகள்
சந்திராஷ்டம நாட்கள் கெடுதல் பலன்களை மட்டும்தான் உண்டாக்கும் என்பது முற்றிலும் தவறு. அந்த நாளில் கடன்காரர்களின் தொல்லை இருக்காது. கூட்டாக செய்துவரும் தொழில்களில் லாபம் காணலாம். பிள்ளைகளின் வாழ்வியல் நிலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். பொதுவாக சந்திராஷ்டம நாட்களில் அனைத்து ராசிக்காரர்களும் அதிக சிரமத்தினை சந்திப்பார்கள் என்றாலும் அடுத்தவர்களுக்கு உதவிசெய்து புகழ் பெறலாம். இந்த சந்திராஷ்டம நாட்கள் மன உளைச்சலை தரும் நாட்கள் என்பதை மட்டும் கருத்தில் கொண்டால் போதும் எந்த விதத்திலும் பயம் கொள்ளத் தேவையில்லை.
இதனையும் படியுங்கள் : விளக்கு ஏற்றும் போது செய்ய வேண்டியவைகளும் செய்யக்கூடாதவைகளும்



