உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் தூதுவளை! நெஞ்சுச்சளியை விரட்டும், ஆஸ்துமாவை போக்கும்!

- Advertisement -

`தூதுவளை இலை அரைச்சு தொண்டையில தான் நனைச்சு மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா…’ என்று ஒரு சினிமாப்பாடல் உண்டு. தூதுவளை இலையை துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் தொண்டையில் எந்தப்பிரச்சினையும் வராது. ஆக தூதுவளை இலையை சாப்பிட்டிருப்பதால் தனது மாமனுடன் (காதலன்) மணிக்கணக்கில் பேசுவேன், எனக்கு ஒன்றும் ஆகாது என்பதுபோல் இந்தப்பாடல் எழுதப்பட்டுள்ளது. ஆம்… தொண்டை தொடர்பான நோய்களுக்கும் சளித்தொந்தரவுகளுக்கும் தூதுவளை நல்ல மருந்தாகும்.

-விளம்பரம்-


வீட்டுத்தோட்டங்களில் தூதுவளை


தூதுவளை… தூதுவேளை, தூதுளம், சிங்கவல்லி, அளர்க்கம் என வேறு சில பெயர்களைக்கொண்ட தூதுவளை முட்கள் நிறைந்த ஓர் தாவரமாகும். இதன் இலை, பூ, காய், வேர் என அனைத்துக்கும் மருத்துவ குணம் உண்டு. இன்றைக்கு வீட்டுத்தோட்டங்கள் மற்றும் மாடித்தோட்டங்களில் வளர்க்கப்படும் மூலிகைச் செடிகளில் தூதுவளையும் இடம்பெற்றிருக்கிறது. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் தூதுவளையின் மருத்துவ குணம் பற்றி தெரியவந்துள்ளது.

- Advertisement -


வெள்ளை நிற தூதுவளை


வேலிகளிலும், புதர் மண்டிக்கிடக்கும் இடங்களிலும். சாலையோரங்களிலும் தானாக வளர்ந்திருக்கும் இந்த மூலிகையின் தண்டுப்பகுதியில் முட்கள் நிறைந்திருக்கும். ஊதா நிறப்பூக்களையும், சிவப்பு நிற பழங்களையும் கொண்டது. தூதுவளையில் வெள்ளை நிற பூ பூக்கும் ஒரு இனமும் உள்ளது. மழைக்காலங்களில் செழித்து வளரும் இந்த மூலிகையை துவையல், சட்னி என பல வடிவங்களில் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், ஜலதோஷம், தொண்டைக்கட்டு மற்றும் ஆஸ்துமா போன்ற நுரையீரல் தொடர்பான பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம்.


நெய் விட்டு காய்ச்சிய தூதுவளை


உணவே மருந்து, மருந்தே உணவு என்ற அடிப்படையில் பயன்படுத்தப்படும் மூலிகைகளுள் முக்கியமானது தூதுவளை. நெய் காய்ச்சும்போது முருங்கை இலைகளைச் சேர்த்து காய்ச்சுவதைப்போல தூதுவளை இலைகளையும் சேர்த்துக் காய்ச்சி பயன்படுத்தலாம். இப்படி செய்தால் நெய்யின் மருத்துவ குணம் பல மடங்கு அதிகரிக்கும். நம் முன்னோர் இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றியதால்தான் பெரிய அளவில் நோய்களின் தாக்கமின்றி வாழ்ந்திருக்கிறார்கள்.


வாதம் பித்தம் கபம்


தூதுவளையை பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் சிறு குழந்தைகளுக்கும்கூட மருந்தாகப் பயன்படுத்தலாம். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு சிரமப்படும் குழந்தைகளுக்கு இரண்டு, மூன்று தூதுவளை இலைகளுடன் சின்ன வெங்காயம், கல் உப்பு சேர்த்து நசுக்கி சாறு எடுத்துக் கொடுக்கலாம். நெஞ்சுச்சளியால் சிரமப்படும் பெரியவர்கள்கூட இதுபோல் தூதுவளை இலையை பறித்து பச்சையாக சாப்பிடலாம். கபம் மட்டுமல்ல வாத, பித்த நோய்களை கட்டுப்படுத்தவும் தூதுவளை நல்ல மருந்தாகும்.

-விளம்பரம்-


ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்ல மருந்து


ஆஸ்துமா நோயாளிகளுக்கும்கூட தூதுவளை நல்ல மருந்தாகும். பத்து, பதினைந்து தூதுவளை இலைகளை சிறிது சிறிதாக நறுக்கி சின்ன வெங்காயம் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு வதக்க வேண்டும். இதில் நெல்லிக்காய் அளவு எடுத்து தொடர்ந்து ஐந்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா தொந்தரவில் இருந்து மீளலாம். குறிப்பாக மூச்சுவிட சிரமப்படும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது நல்ல மருந்து. தூதுவளை இலையை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்தும் குடிக்கலாம். இதை தொடர்ந்து பின்பற்றினால் ஆஸ்துமா அவதியிலிருந்து மீளலாம்.


காசநோய்க்கு மருந்து


தூதுவளையை அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் கட்டியுள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல், நமைச்சல், வயிறு மந்தம் போன்றவையும் சரியாகும். டி.பி எனப்படும் காச நோயாளிகள் அவர்கள் சாப்பிடும் மருந்துகளுடன் தூதுவளையையும் சாப்பிட்டு வந்தால் விரைவில் அந்நோயிலிருந்து விடுபடலாம். புற்றுநோய் மற்றும் கல்லீரல் சார்ந்த நோய்களுக்கு தூதுவளையின் செயல்பாடு குறித்த ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.


இளமை தரும் தூதுவளை பூ


தூதுவளையின் பூக்களை பால் சேர்த்து கொதிக்கவைத்து இரவு நேரங்களில் குடித்து வந்தால் ஆண்மைக்குறை நீங்கும். குழந்தையின்மை பிரச்சினைக்காக சிகிச்சை எடுப்பவர்கள் இதுபோன்ற எளிய முறையையும் பின்பற்றலாம். இதேபோல் தூதுவளை பூவை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் என்றும் இளமையாக இருக்கலாம். உடல் வனப்புடன் இருக்கவும், உடல் பருக்கவும் இது உதவும். பூவை காய வைத்துப் பொடியாக்கி பாலில் கலந்தும் சாப்பிடலாம்.

-விளம்பரம்-


வற்றல் ஊறுகாய்


.தூதுவளையின் காய்களை மோரில் ஊறவைத்து காயவைத்து வற்றலாகவும், ஊறுகாய் செய்தும் பயன்படுத்தலாம். காய்களை சமைத்தும் சாப்பிடலாம். இதுபோன்று பலவழிகளில் தூதுவளை காய்களை சமைத்துச் சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமாகும். குறிப்பாக கண்ணில் பித்த நீர் அதிகரிப்பது, கண் நோய்கள் போன்ற பிரச்சினைகளுக்கு தூதுவளை காய் நல்லது. பழங்களையும் இதேபோல் பயன்படுத்தலாம். மழை மற்றும் குளிர் காலங்களில் தூதுவளையில் சூப், ரசம், அடை, தோசை, சாதம், புளிக்குழம்பு, ரொட்டி, பக்கோடா, இட்லி பொடி என பலவிதங்களில் தயாரித்து சாப்பிட்டு நலமுடன் வாழலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here