செரிமானக்கோளாறு முதல் ஆண்மைக்குறைவு வரை சரி செய்யும் அற்புத மூலிகை!

- Advertisement -

வெற்றிலை… இதை வெற்று இலை என்று நினைத்துவிடாதீர்கள். வெற்றி தரும் இலை என்று சொல்லுமளவுக்கு பல்வேறு பிணிகளைத் தீர்க்கக்கூடியது. வெற்றிலையில் நீர்ச்சத்து அதிகமாகவும், புரதம், கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சவிக்கால் என்னும் பொருள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வெற்றிலையை வெறுமனே சாப்பிடுவதைவிட பாக்கு, சுண்ணாம்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உண்ட உணவு செரிமானமாவதுடன் உடல் கழிவுகள் வெளியேறும். மலச்சிக்கல் பிரச்சினையை சரிசெய்வதுடன் கபத்தை வெளியேற்றும்; வாத, பித்தக்கோளாறுகள் வராமல் பார்த்துக்கொள்ளும்.

வெற்றிலையின் மகத்துவம்

மருத்துவ குணம் நிறைந்த இந்த மூலிகை மிகச் சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய ஒன்று. ஆனால், நம்மில் பலர் வெற்றிலை என்றதும் அது ஒரு போதைப்பொருள் என்ற தவறான பார்வையுடனே பார்க்கின்றனர். வெற்றிலையுடன் சிலர் புகையிலையைச் சேர்த்து உண்டதால் அதன்மீது இப்படியொரு தவறான முத்திரை குத்தப்பட்டுவிட்டது. வெற்றிலையை பீடாவாக்கிக் கொடுத்தால் அதை வாங்கி சுவைத்துச் சாப்பிடுபவர்கள் வெற்றிலை என்றதும் ஏனோ முகம் சுளிக்கின்றனர். பழங்காலம் முதல் இன்றுவரை சுப நிகழ்ச்சிகளில் வெற்றிலைக்கு முக்கிய இடம் தரப்படுகிறது. ஆனால், அதன் மகத்துவம் கால ஓட்டத்தில் மறக்கடிக்கப்பட்டுவிட்டது வருத்தத்துக்குரிய ஒன்று.

- Advertisement -

தாம்பூலம் தரித்தல்

சித்த மருத்துவத்தில் நோயணுகா விதிகளில் தாம்பூலம் தரித்தல் பற்றி கூறப்பட்டுள்ளது. அதில் வெற்றிலையை எப்படி சாப்பிட வேண்டும் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. காம்பு, நுனி, நடுநரம்பு போன்றவற்றை நீக்கி வெற்றிலையின் பின்புறம் கல் சுண்ணாம்பினைத் தடவி பாக்கு சேர்த்து மெல்ல வேண்டும். முற்காலத்தில் மூன்றுவேளையும்கூட வெற்றிலை சாப்பிட்டிருக்கிறார்கள். காலை உணவுக்குப் பிறகு பாக்கின் அளவைக்கூட்டி சாப்பிட்டால் பித்தத்தைத் தடுக்கும். மதிய உணவுக்குப் பிறகு சுண்ணாம்பின் அளவைக்கூட்டிக் கொண்டால் வாதம் மற்றும் வாயுவைக் கட்டுப்படுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக சேர்த்துக்கொண்டால் நெஞ்சில் கபம் சேராமல் பார்த்துக்கொள்ளும். தாம்பூலம் தரிக்கும் முறையை சித்த மருத்துவம் இப்படி வகுத்துள்ளது.

-விளம்பரம்-

முதல் நீர் நஞ்சு நான்காம் நீர் இனிப்பு

வெற்றிலையை மெல்லும்போது எடுத்தவுடன் அதன் சாற்றினை விழுங்கிவிடக்கூடாது. நன்றாகக் கடித்து கூழாக்கியதும் முதல் இரண்டு உமிழ்நீரினை துப்பிவிட வேண்டும். அதன்பிறகே உமிழ்நீருடன் கலந்த சாற்றினை விழுங்க வேண்டும். முதல் நீர் நஞ்சு என்றும், இரண்டாவது பித்த சூட்டினை அதிகரிக்கும் என்றும், மூன்றாவது அமுதம் என்றும், நான்காவது இனிப்புச்சுவையூட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்படி வெற்றிலை உண்டுவந்தால் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கலாம். குறிப்பாக உண்ட உணவு செரிமானமாக வேண்டுமென்றால் வெற்றிலை சாப்பிடுவது நல்லது. சர்க்கரை நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு செரிமானக்கோளாறு ஏற்பட்டால் அது வேறு சில பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும் என்பதால் வெற்றிலை சாப்பிட வலியுறுத்தப்படுகிறது.

வாய்வுக்கோளாறை விரட்டும்

இன்றைக்கு நாம் உண்ணக்கூடிய பொருந்தாத சில உணவுகளால் வாய்வுக்கோளாறு ஏற்பட்டு சிலர் மிகவும் அவதிப்படுவதைக் காண முடிகிறது. குறிப்பாக இறைச்சி உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது, நள்ளிரவு வேளைகளில் பிரியாணி, தந்தூரி, கிரில் சிக்கன் போன்ற உணவுகளை உண்பது அதிகரித்துவிட்டது. அவற்றை செரிமானம் செய்ய வெற்றிலை உதவும். ஆனாலும் தொடர்ந்து பொருந்தாத உணவுகளை உண்பது நல்லதல்ல என்பதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். சிலருக்கு வாய்வுக்கோளாறு ஏற்படும்போது அது இதய நோயைப்போலவே சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். தலை கிறுகிறுப்பு, மயக்கம், இதயப்பகுதியில் வலி என பல்வேறு அறிகுறிகள் தோன்றும். இதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் வராமலிருக்க வெற்றிலை சாப்பிடுவது நல்ல தீர்வைத் தரும்.

ஆண்மைக்கு பலம் ஊட்டும்

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புடன் ஜாதிக்காய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்குறை பிரச்சினையில் இருந்து மீளலாம். தாம்பத்தியத்தின்போது நீடித்த உறவு வேண்டுமென்றால் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புடன் ஜாதிக்காய் மற்றும் ஜாதிப்பத்திரி தலா ஒரு அரிசி எடை, கஸ்தூரி ஒரு கடுகு அளவு, ஏலக்காய் ஒன்று, லவங்கம் ஒன்று, பாதாம்பருப்பு மற்றும் முந்திரி தலா அரை பருப்பு, உலர் திராட்சை நான்கு எண்ணிக்கை, குல்கந்து கால் டீஸ்பூன் சேர்த்து இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிடுவதால் புதிய ரத்தம் ஊறுவதுடன் உடலும் மனமும் ஆரோக்கியம் பெற்று தாம்பத்தியம் சிறக்கும். அதற்காக தினமும் இதைச் சாப்பிடுவது உகந்ததல்ல. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இதுபோன்று சாப்பிட்டு பலன் பெறலாம். வெற்றிலை போடும்போது துளசி வேர்ப்பொடி ஒரு சிட்டிகை சேர்த்துச் சாப்பிட்டாலும் ஆண்மை அதிகரிக்கும்.

பூச்சிக்கடி காணாக்கடி

வெற்றிலையுடன் மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் நிறைய பிரச்சினைகள் சரியாகின்றன. எளிதில் செரிக்காத உணவுகள், பழைய எண்ணெயில் செய்த பலகாரங்கள் மற்றும் கெட்டுப்போன உணவுகளைச் சாப்பிட நேர்ந்தால் உடலில் அரிப்பு, தடிப்பு ஏற்படும். சிலருக்கு பூச்சி ஏதாவது கடித்தாலும்கூட தோலில் அலர்ஜி, தடிப்புகள் ஏற்படும். எந்த பூச்சி கடித்தது என்று தெரியாத சூழலில் அதை காணாக்கடி என்பார்கள். இதுபோன்ற நேரங்களில் வெற்றிலையுடன் மிளகு, கல் உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் பிரச்சினை சரியாகும். பெரியவர்களாக இருந்தால் இரண்டு வெற்றிலையுடன் 5 மிளகு, கல் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். சிறியவர்கள் அளவை குறைத்துக்கொள்ளலாம்.

தாய்ப்பால் சுரக்க உதவும்

வெற்றிலையை பஜ்ஜி அல்லது சட்னி செய்து சாப்பிடலாம். ரசம் செய்யும்போது அதனுடன் வெற்றிலை சேர்த்துச் சாப்பிட்டால் பல பலன்கள் கிடைக்கும். வெற்றிலையில் குழம்பும்கூட செய்யலாம். இதுதவிர வேறு சில வழிகளிலும் வெற்றிலையை பயன்படுத்தலாம். தலைவலியால் அவதிப்படுபவர்கள் வெற்றிலைச் சாறுடன் கற்பூரம் சேர்த்துக் குழைத்து நெற்றியில் தடவினால் வலி நீங்கும். 100 மில்லி தேங்காய் எண்ணெயுடன் ஐந்து வெற்றிலை சேர்த்துக் காய்ச்சி படை, சொறி, சிரங்கு உள்ள இடங்களில் தடவினால் நிவாரணம் கிடைக்கும். தாய்ப்பால் சுரக்காத பெண்கள் வெற்றிலையை தணலில் (தீயில்) வாட்டி மார்பில் வைத்துக் கட்டி வந்தால் பால் சுரக்கும். இதுபோன்று பல்வேறுவிதமான உடல்நலக்கோளாறுகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ள வெற்றிலை உதவிகரமாக இருக்கும். இவற்றையெல்லாம் உணர்ந்து இனிமேல் வெற்றிலைதானே? என்று அலட்சியப்படுத்தாமல் வெற்றிலை உண்டு பலன் பெறுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here