அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் பொருள்களை வைத்து எளிமையாக நெஞ்சுச்சளி, இருமலை விரட்டலாம்!

- Advertisement -

சளி, இருமல், ஜலதோஷத்தால் நம்மில் பலர் அவதிப்படும்போது என்னென்னவோ சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று ஒட்டுமொத்த வாழ்க்கை மீதும் வெறுப்பு ஏற்படுகிறது. இதற்கே இப்படியென்றால் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அது ஒரு தொடர்கதையாக நீடிக்கும்பட்சத்தில் என்ன செய்வதென்று பலரும் தவியாய்த் தவிக்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களுக்காக நமக்கு எளிதில் கிடைக்கும் இஞ்சி, மிளகு, தூதுவளை, கொள்ளு போன்றவற்றைக் கொண்டு ரசம், சூப், குழம்பு என நாமே தயாரித்து உண்ணலாம்; நோயின்றி வாழலாம்.

-விளம்பரம்-

நெஞ்சுச்சளி

ஆடாதொடை இலையை சிறு துண்டாக நறுக்கி இட்லிப்பானையில் வைத்து பிட்டவியலாக (புட்டு) அவித்து சூடாக இருக்கும்போதே பிழிந்து சாறு எடுக்க வேண்டும். 50 மில்லி அளவு சாறு எடுத்து15 மில்லி தேன் கலந்து ஒருவேளைக்கு 10 மில்லி வீதம் தினமும் நான்கு முதல் ஆறுவேளை குடிக்கலாம். இது நெஞ்சுச்சளிக்கு மட்டுமல்ல சளியுடன் ரத்தம் வருவதையும் சரிசெய்யும்.

- Advertisement -

கொள்ளு சூப்

நெஞ்சுச்சளியைக் கரைக்கக்கூடியது கொள்ளு சூப். கைப்பிடி கொள்ளுப்பயறை வறுத்துக் கொள்ளவும். சிறிது துவரம்பருப்பு, மிளகு, சீரகம், மல்லித்தழை, வெள்ளைப்பூண்டு, தக்காளி போன்றவற்றையும் வறுத்து கொள்ளுப்பயறுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதில் நீர் விட்டுக் கரைத்து கொதிக்க வைக்கவும். நல்லெண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்த்துத் தாளித்துக் கொதிக்கும் கலவையுடன் சேர்த்து உப்பு சேர்த்தால் கொள்ளு சூப் தயார். மாலை, இரவு வேளைகளில் இந்த சூப் குடித்தால் நெஞ்சுச்சளி விலக உதவும்.

பூண்டுக்குழம்பு

நெஞ்சில் சளிக்கு பூண்டுக்குழம்பு சாப்பிடுவது நல்லது. சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மிளகு, சீரகம், மல்லித்தழை, தேங்காய் சேர்த்துச் செய்யப்படும் பூண்டுக்குழம்பு மற்றும் பூண்டு ரசம் சளியை அகற்றும். நுரையீரல் குழாய் மற்றும் சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி மலத்துடன் வெளியேற்றும்.

தூதுவளைக் குழம்பு

நெஞ்சுச்சளிக்கு தூதுவளைக் குழம்பு நல்ல மருந்து. தூதுவளையை நெய்யில் வதக்க வேண்டும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுந்து, தனியா, மிளகு, சீரகம், வெந்தயம், தேங்காய்த்துருவல் போன்றவற்றை வறுத்து தூதுவளையுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். நல்லெண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம் சேர்த்துத் தாளித்து புளிக்கரைசலை ஊற்றி மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு ஏற்கெனவே அரைத்த விழுதுகளையும் சேர்த்துக் கொதி வந்ததும் இறக்கினால் தூதுவளைக் குழம்பு தயார்.

-விளம்பரம்-

சளியுடன் இருமல்

சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை போன்றவற்றை சம அளவு எடுத்து இடித்து கஷாயமாக்கிக் குடித்து வந்தால் கடுமையான நெஞ்சுச்சளி மூன்றே நாளில் நம்மை விட்டு விலகும். சளியுடன் இருமல் சேர்ந்து தொல்லைப்படுத்துவது உண்டு. அதற்கு இஞ்சிச்சாறுடன் எலுமிச்சைச்சாறு, தேன் சமஅளவு சேர்த்துக் குடித்து வந்தால் இருமல் நிற்பதுடன் சளி அகலும். மிகவும் எளியமுறையில் இந்த பானத்தைச் செய்து அருந்தி எளிதாக நிவாரணம் பெறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதைக் குடித்து வரலாம்.

துளசி வெற்றிலை

இஞ்சியுடன் மிளகுத்தூள் சேர்த்து நீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். சிம்மில் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை வைத்தாலே போதுமானது. இந்தக் கஷாயத்தை வடிகட்டி தேன் சேர்த்துக் குடித்தால் சளி அகலும். சளியால் அவதிப்படும் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு எளியமுறையில் சிரப் செய்யலாம். ஆடாதொடை. துளசி, கருந்துளசி, வெற்றிலை சமஅளவு எடுத்து சாறு பிழிந்து பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சினால் சிரப் தயார். இதை அரை டீஸ்பூன் வீதம் குடித்து வந்தால் குழந்தைகளைப் பாதிக்கும் நெஞ்சுச்சளி அகலும்.

தொண்டைக்கட்டு

நெஞ்சில் சளி கட்டுவதுடன் தொண்டைக்கட்டு, நாக்குச்சுவையின்மை, குரல் கம்மல் என பாடாகப்படுத்திவிடும். அதுபோன்ற நேரங்களில் திப்பிலியை நெய்யில் வறுத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடலாம். திப்பிலியுடன் இஞ்சி, மிளகு சேர்த்து வெந்நீரில் போட்டுக் காய்ச்சிக் குடித்தாலும் சளி விலகும்.

-விளம்பரம்-

கோதுமைத் தவிடு

சளி கட்டிக்கொண்டு மூச்சுவிடவோ, இருமவோ, தும்மல் போடவும்கூட முடியாமல் சிலர் அவதிப்படுவதைக் காண முடியும். இப்படிப்பட்ட சூழலில் ஒரு கரண்டியில் வேப்ப எண்ணெயை ஊற்றி சூடுபடுத்தி நெஞ்சு, விலா, முதுகுப்பகுதியில் தேய்த்துவிட வேண்டும். அதன்பிறகு எண்ணெய் தடவிய இடத்தில் கோதுமைத்தவிடு அல்லது கோதுமை மாவை வறுத்து துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்க வேண்டும். இது நெஞ்சுச்சளியை இளக்கி மலத்துடன் வெளியேற்றிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here