ஒற்றைத்தலைவலியில் இருந்து மீண்டு வர உதவும் எளிய மூலிகைகள்!

- Advertisement -

ஒற்றைத் தலைவலி… இன்றைய சூழலில் வயது வித்தியாசம் இல்லாமல் பலரையும் படுத்தி எடுக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. மைக்ரெய்ன் என்று அழைக்கப்படும் இந்த நலக்குறைவுக்கு ஏதேதோ சிகிச்சைகள் எடுத்தும் பலனில்லை என்று சொல்பவர்கள் ஏராளம். உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக தீவிர தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும் இந்தப்பிரச்சினை நரம்பியல் தொடர்பான ஒரு நோய்க்குறி என்கிறார்கள். `தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்…’ என்பார்கள். அதிலும் குறிப்பாக இந்த ஒற்றைத் தலைவலி வந்தவர்களுக்குத்தான் அதன் தீவிரம் தெரியும்.


பெண்களை அதிகம் பாதிக்கும் ஒற்றைத்தலைவலி


ஒற்றைத் தலைவலி எப்படி வருகிறது? ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை ஒற்றை வரியில் சொல்லிவிட்டு கடந்துவிட முடியாது. மனிதர்கள் பலவிதம், அதைப்போல தலைவலியில் இந்த ஒற்றைத்தலைவலியும் பலவிதமான காரணங்களால் வருகிறது. பெரும்பாலும் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கிறது இந்த ஒற்றைத் தலைவலி. ஒருவருக்கு ஒற்றைத் தலைவலி வந்தால் மண்டை இரண்டாகப் பிளந்ததுபோன்று மிகக்கடுமையான தலைவலியை வரும். அப்போது வாழ்க்கையில் எந்தவித பிடிப்பும் இல்லாத ஒரு நிலைக்கு கொண்டுபோய்விடும். அத்தனை கொடியது இந்த ஒற்றைத் தலைவலி. மிகச் சரியாக கையாண்டால் நமது பாரம்பரிய மருத்துவத்தின்மூலம் ஒற்றைத் தலைவலியை சரிசெய்யலாம். மிகச் சாதாரணமாக கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு ஒற்றைத்தலைவலியிலிருந்து விடுபடலாம்.

- Advertisement -


ஹார்மோன் மாற்றங்களால் ஒற்றைத்தலைவலி


ஆண் – பெண், சிறியவர் – பெரியவர், ஏழை – பணக்காரன் என்ற வித்தியாசம் எதுவும் இல்லாமல் எல்லோரையும் பாதிக்கும் ஒற்றைத் தலைவலி வருவதற்கான மூல காரணத்தை முதலில் தேட வேண்டியது அவசியம். மன அழுத்தம், மனச்சோர்வு, தூக்கமின்மை, குறைந்த சர்க்கரை, மாதவிடாயின்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்டவை ஒற்றைத்தலைவலி வருவதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இவைதவிர மேலும் சில காரணங்களாலும் ஒற்றைத்தலைவலி வரலாம். எது எப்படியோ… ஒற்றைத் தலைவலி யாருக்கு, எப்படி வந்தாலும் அதை சரிசெய்ய ஏராளமான வழிகள் உள்ளன.


சுக்கு பற்று


வெற்றிலைச் சாற்றுடன் சூடம் (கற்பூரம்) சேர்த்துக் குழைத்து நெற்றியில் பூசினால் ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் பெறலாம். சாதாரணமாக வரக்கூடிய தலைவலிக்கு சுக்கினை நீர் விட்டு (உரசி) இழைத்து பற்று போடுவது நம் வழக்கம். ஒற்றைத்தலைவலி வந்தவர்களும்கூட சுக்கு பற்று போட்டால் நிவாரணம் கிடைக்கும். ஓமம் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து இளம்வறுப்பாக வறுத்து அதனுடன் சிறிது கற்பூரம் சேர்த்து பருத்தித்துணியில் பொதிந்து மூக்கில் வைத்து உறிஞ்சினால் ஒற்றைத் தலைவலி பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

-விளம்பரம்-


திருநீற்றுப்பச்சிலை திராட்சை பழச்சாறு


திருநீற்றுப் பச்சிலையை மோந்து பார்த்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஒற்றைத் தலைவலியிருந்து நம்மை விடுபடலாம். சிகிச்சைகள் பல எடுத்தும் குணமாகாத ஒற்றைத் தலைவலி இத்தகைய சாதாரண சிகிச்சைகளின்மூலம் சரியாகுமா? என்று நம்பிக்கையிழக்காமல் செய்யுங்கள், நிச்சயம் பலன் கிடைக்கும். பக்கவிளைவு எதுவும் ஏற்படாது என்பதால் தாராளமாகச் செய்யலாம். வெள்ளை எள்ளினை எருமைப்பால் விட்டு அரைத்து நெற்றியில் திருநீறு பூசுவதுபோல பூசி அதிகாலையில் உதித்தும் இளஞ்சூரியனை கண் கொட்டாமல் பார்க்க வேண்டும். இதை தினமும் செய்துவந்தால் சிறிது சிறிதாக ஒற்றைத் தலைவலியிருந்து விடுபடலாம். அடிக்கடி திராட்சை பழச்சாறு குடித்து வந்தாலும் பலன் கிடைக்கும்.


வெந்நீர்க் குளியல்


எலுமிச்சை பழத்தின் தோலை நன்றாக காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தாலும் ஒற்றைத் தலைவலியிலிருந்து விடுபடலாம். குளிர்ந்த நீரில் ஒரு பருத்தித் துணியை நனைத்து தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பற்று போடுவதுபோல போட்டு வந்தாலும் பலன் கிடைக்கும். அதேபோல் வெதுவெதுப்பான நீரில் கை, காலை சுமார் அரை மணி நேரம் வைத்து எடுத்தாலும் ஒற்றைத் தலைவலி விட்டு விலகும். தூங்கச் செல்லும் முன் மிதமான சூடு உள்ள நீரில் துணியை நனைத்து நெற்றி, தலைப்பகுதியில் ஒத்தடம் கொடுப்பதும் தீர்வு தரும். வெந்நீரில் குளிப்பதும்கூட பலன் தரும்.


நல்லவேளை நாய்வேளை


நல்லவேளைக்கீரை, வெற்றிலை, அறுகம்புல் அனைத்தையும் சம அளவு எடுத்து சாறு எடுத்து ஒரு பஞ்சு அல்லது பருத்தித்துணியில் நனைத்து எந்தப்பக்கம் தலைவலிக்கிறதோ அதற்கு எதிர்புற காதில் வைக்க வேண்டும். இதேபோல் தொடர்ந்து மூன்று நாள் காலை வேளையில் வைத்து வந்தால் ஒற்றைத் தலைவலி பிரச்சினையிலிருந்து விடுபடலாம். நல்லவேளைக்கீரை கிடைக்காதபட்சத்தில் நாய்வேளையை எடுத்து பயன்படுத்தலாம்.


ஆரஞ்சுப்பழத்தோல்


ஆரஞ்சுப்பழத்தின் தோலும்கூட ஒற்றைத்தலைவலிக்கு அற்புதமான தீர்வைத் தரும். அதாவது, ஆரஞ்சுப்பழத்தின் தோலைப் பிழிந்தால் மிகக்குறைவாக வரும் சாற்றினை சிறுவயதில் கண்ணில் பீய்ச்சியடித்து விளையாடியிருப்போம். கண்ணில் எரிச்சலை உண்டாக்கக்கூடிய அந்த சாற்றினை ஒரு பாத்திரத்தில் பீய்ச்சியடித்து அதை பட்ஸ் அல்லது காட்டன் துணியில் நனைத்து காது மடலின் நுழைவாயிலில் லேசாக தடவ வேண்டும். கோழி இறகு அல்லது மயிலிறகையும் இதேமாதிரி பயன்படுத்தலாம். ஆனால், இதுபோன்ற சிகிச்சைகள் செய்யும்போது கொஞ்சம் கவனமாக செய்யவேண்டும்.


பீட்ரூட் ஜூஸ்


ஒற்றைத் தலைவலியிலிருந்து விடுபட எளிமையான ஜூஸ் ஒன்றை நாமே தயாரித்து அருந்தலாம். கேரட் சாறு ஒரு டம்ளர் எடுத்து அதனுடன் தலா கால் டம்ளர் பசலைக்கீரை சாறு மற்றும் பீட்ரூட் சாறு சேர்த்துக் குடிக்கலாம். கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய் சம அளவு எடுத்து சாறு எடுத்துக் குடித்தாலும் பலன் கிடைக்கும். வெள்ளைப்பூண்டுடன் மிளகு சேர்த்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி சூடு ஆறியதும் தலையில் தேய்த்துக் குளித்து வந்தாலும் நாளடைவில் ஒற்றைத் தலைவலியிலிருந்து விடுபடலாம்.


மூலிகைத் தலையணை


ஒற்றைத் தலைவலியில் இருந்து மீண்டுவர இதுபோன்று இன்னும் பல எளிய வழிமுறைகள் உள்ளன. நொச்சி, மருதாணி, வேப்பிலை, கற்பூரவல்லி, மஞ்சணத்தி (நுணா), புங்கை, ஆல், அரசு, பூவரசு, யூகலிப்டஸ் போன்ற மூலிகைகளைக் கொண்டு செய்யப்படும் மூலிகைத் தலையணை செய்யலாம். இந்த தலையணையை இரவில் தலையில் வைத்து உறங்கினால் ஒற்றைத்தலைவலியில் இருந்து முழுமையாக விடுபடலாம். இந்தத் தலையணையை நாமே தயாரித்துக்கொள்ளலாம். பொறுமையுடன் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here