சமோசா இந்தியாவின் பிரபலமான மாலை நேர உணவு வகை, காபி மற்றும் டீ யுடன் சுவையாக இருக்கும். சமோசாகளில் பல வகைகள் உண்டு, உருளைக்கிழங்கு சமோசா, காய்கறி சமோசா, மற்றும் வெங்காய சமோசா என்று சொல்லிக் கொண்டே போகலாம். நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்த தின்பண்டங்களில் ஒன்று சமோசா. இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எத்தனை முறை வெளியில் சென்றாலும், அத்தனை முறையும் ஒரு டீயும், சமோசாவும் சாப்பிடாமல் வீட்டிற்கு திரும்பிய சரித்திரம் யாருடைய வாழ்க்கையிலும் இருக்காது.
இது குழந்தைகளுக்கு மட்டும் பிடித்த ஒன்று அல்ல, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று சமோசா. இது செய்வது பெரிய விஷயம் அல்ல, வீட்டில் இருக்கும் பொருட்கள் போதும். இதை செய்து சாப்பிட்டு பாருங்கள். வெங்காய சீஸ் சமோசா ரெசிபி, பெயருக்கு ஏற்றாற்போல், கேப்சிகம், வெங்காயம் மற்றும் பிற மசாலாப் பொருட்களுடன் சீஸ் சேர்த்து செய்யப்படுகிறது. இது வித்தியாசமான செய்முறை ஆனால் வாயில் நீர் ஊறவைக்கும் சுவையைத் தருகிறது.
இந்த சீஸி மற்றும் சுவையான சமோசா ரெசிபி மிக விரைவாக செய்யக்கூடியது. இது கொத்தமல்லி அல்லது புதினா சட்னி அல்லது டொமேட்டோ சாஸ் உடன் சேர்ந்து சாப்பிட சுவையாக இருக்கும். மாலை நேர ஸ்நாக்ஸ் வகைகளில் போண்டா, பஜ்ஜி, வடை என பல ரெசிப்பிகளைப் பார்த்திருக்கிறோம், அந்தவகையில் இப்போது வெங்காய சீஸ் சமோசா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
வெங்காய சீஸ் சமோசா | Onion Cheese Samosa Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 1 கப் மைதா மாவு
- 1 டீஸ்பூன் ஆம்சூர் பவுடர்
- 100 கி வெங்காயம்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 டீஸ்பூன் சாட் மசாலா
- 1 டீஸ்பூன் ஓமம்
- 1 டீஸ்பூன் சோடா உப்பு
- 50 கி துருவிய சீஸ்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
செய்முறை
- முதலில் ஒரு பவுளில் மைதா மாவுடன் ஓமம், சோடா உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.
- பின் சிறிதளவு எண்ணெய் தடவி ஒரு துணியால் மூடி 20 நிமிடங்கள் வரை பிசைந்த மாவை ஊற வைத்து கொள்ளவும்.
- வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி அதனுடன் மிளகாய் தூள், சாட் மசாலா, ஆம்சூர் பவுடர், உப்பு, மிளகாய் தூள், குடை மிளகாய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு துருவிய சீஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பின் சிறிதளவு மைதா மாவில் தண்ணீர் ஊற்றி பசை போல் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- பின் பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிதளவு எடுத்து மெல்லிய சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும். பின் அதை இரண்டாக வெட்டி அதன் ஓரங்களில் மைதா மாவு பசையை தடவவும்.
- பின் அதன் நடுவில் நாம் தயார் செய்து வைத்துள்ள வெங்காய கலவையை சிறிதளவு வைத்து ஒரங்களை நன்றாக அழுத்தி மூடவும். இப்படி மீதம் இருக்கும் மாவுகளை தயார் செய்து கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்திருக்கும் சமோசாக்களை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் அருமையான, சுவையான வெங்காய சீஸ் சமோசா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட தள்ளுவண்டி கடை சமோசா சுண்டல் மசாலா இப்படி வீட்டில் செய்து பாருங்கள்!