ஆழ்ந்த நித்திரை பெற வெங்காயம் சாப்பிடுங்கள்!

- Advertisement -

தமிழர்களின் ஆதிகால உணவுப்பட்டியலில் வெங்காயத்துக்கு முதலிடம் உண்டு. காரணம் என்னவென்றால் உணவுப்பொருளான வெங்காயத்தில் அதீத மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பதை புரிந்துகொண்டு வழிவழியாய் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். `உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதற்கு வெங்காயத்தை நல்ல உதாரணமாகச் சொல்ல முடியும். ஆனாலும் நம்மில் சிலர் வெங்காயத்தை உணவிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே, இனிமேலாவது வெங்காயத்தின் உன்னதத்தை புரிந்துகொண்டு அதை விரும்பி உண்டு, நோய்களை விரட்டுவோம்.

-விளம்பரம்-


நோயற்ற வாழ்வு வாழலாம்


வெங்காயம் என்றதும் மிளகாய், கறிவேப்பிலை போல சமையலில் பயன்படுத்தக்கூடிய ஒன்று என்றுதான் நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அது மிகச் சிறந்த உணவுப்பொருளாகவும், கிருமிநாசினியாகவும், பல்வேறு நலன்களை அள்ளித்தரும் மருந்தாகவும் பயன்படுகிறது என்பது நம்மில் பலர் அறியாதது. விவசாயிகள் மற்றும் விவசாயத்தொழிலாளர்களின் நோயற்ற வாழ்வுக்கு பெரும் துணையாக இருப்பது இந்த வெங்காயம்தான் என்றால் அது மிகையல்ல. நச்சுக்கிருமிகளை கொல்லவும், உடலை மெலிய வைக்கவும், குரலை இனிமையாக்கவும், பித்தத்தைத் தணித்து மூளையை சுறுசுறுப்பாக்கவும் பயன்படக்கூடியது. மேலும் வயிற்றில் உள்ள கட்டிகள் மற்றும் கொழுப்பைக் கரைக்கக்கூடிய நல்மருந்தாக திகழக்கூடிய வெங்காயம் மேலும் பல நோய்களை போக்கக்கூடியது.

- Advertisement -


கிருமி நாசினி


வெங்காயம் மிகச் சிறந்த கிருமிநாசினி என்ற உண்மையை இன்றைக்கும் கிராமங்களில் கண்கூடாகப் பார்க்கலாம். குறிப்பாக அம்மை நோய் வந்தால் வீட்டின் கதவு, வாசல், ஜன்னல் போன்ற இடங்களில் சின்ன வெங்காயத்தை துண்டுதுண்டாக வெட்டி வைத்திருப்பார்கள். அப்படி வெட்டி வைக்கப்பட்ட வெங்காயத்தை எடுத்து பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் அதில் கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும் என்பதை கிராமப்புற மக்கள் அறிந்திருக்கிறார்கள். சிலர் கழுத்தில் வெங்காய மாலை அணியும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். நோய்க்கிருமிகளை கட்டுப்படுத்தும் தன்மை வெங்காயத்துக்கு இருப்பது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.


பக்கவாதம்


பக்கவாதம் எனப்படும் மூளை ரத்தக்குழாய் அடைப்பு நோய்க்கு பச்சை வெங்காயம் நல்ல பலன் தரும். சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் காலப்போக்கில் பக்கவாதம் சரியாகும். இதுதவிர வாரத்தில் மூன்று நாட்கள் வெங்காயத்தை பச்சடி செய்து சாப்பிட்டு வந்தால் பக்கவாதம் தீவிரமடையாமல் பார்த்துக்கொள்ளலாம். நோய் பாதிப்பு இல்லாதவர்கள் பக்கவாதம் வராமல் முன்கூட்டி தடுத்துக்கொள்ள வெங்காயத்தை பச்சடி செய்து சாப்பிடலாம். இல்லாவிட்டால் மதியவேளையில் உணவுடன் வெறும் வெங்காயத்தை மட்டும் சாப்பிடுவது நல்லது. வயல்வெளியில் வேலை செய்பவர்கள், ஆடு மாடு மேய்ப்பவர்கள் மற்றும் காட்டுப்பகுதியில் வேலை செய்பவர்கள் சின்ன வெங்காயத்தை தொடுகறிபோல் வைத்துக்கொண்டு பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். வறுமை காரணமாக அவர்கள் இந்த உணவை உண்டாலும் வெங்காயம் அவர்களையும் அறியாமல் நலமூட்டுகிறது.


தூக்கமின்மை


இன்றைக்கு நம்மில் பலர் தூக்கமின்மை காரணமாக மிகவும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இதற்கு வெங்காயம் நல்ல தீர்வைத் தரும். பச்சை வெங்காயத்தை அப்படியே சாப்பிடமுடியவில்லை என்பவர்கள் நன்றாகக் கடைந்து எடுத்த மோரில் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் குடிக்கலாம். மிளகுத்தூள், சீரகத்தூளை கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளித்து சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இரவு நேரங்களில் வெங்காயத்தை உப்பு சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டாலும் இரவில் நிம்மதியான உறக்கம் வரும். தூக்கமின்மை பிரச்சினைக்கு என்னென்னவோ சிகிச்சை எடுத்தும் தீர்வு கிடைக்காதவர்கள் இதுபோன்ற எளிய வழிமுறையைப் பின்பற்றி நலம் பெறலாம்.

-விளம்பரம்-


இடை சிறுக்கும், குரல் வசீகரமாகும்


புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நுரையீரலில் கபம் கட்டிக்கொண்டு பாடாய்ப்படுத்தும். இதயக்கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். காரணம் புகையில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் ரத்தத்தையும் நஞ்சாக்கும். இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டுமென்றால் வெங்காயத்தை ஏதாவது ஒரு வடிவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இப்படியாக வெங்காயத்தின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். ரோமானிய நாட்டுப்பெண்கள் இடை சிறுத்து அழகுப்பெண்களாக வலம் வருவதற்கு வெங்காயத்தை விரும்பிச் சாப்பிடுவதே காரணம் என்கிறார்கள். அதேபோல் நீரோ மன்னன் தனது குரல் இனிமையாக, வசீகரமாக இருப்பதற்கு தினமும் வெங்காயம் சாப்பிட்டு வந்ததாக குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது.


சட்னி, பச்சடி, வடகம்


இத்தனை சிறப்புமிக்க வெங்காயத்தை சட்னி, சாம்பார், பச்சடி, வடகம் என பலவிதங்களில் தயார் செய்து சாப்பிடலாம். பழைய சோறு, சுடு சோறு என எந்தவிதமான உணவுக்கும் வெங்காய வடகம் இருந்தால் போதும், உணவு சிறக்கும். வெங்காயத்தில் பெரும்பாலும் சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயத்துக்கு மட்டுமே மருத்துவ குணம் உண்டு என்று கருத வேண்டாம். பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயத்துக்கும் மருத்துவ குணம் உள்ளது. அதேநேரத்தில் வெள்ளை வெங்காயத்துக்கு சிறப்பு குணங்கள் உண்டு. சின்ன வெங்காயத்தில் வெள்ளை நிற வெங்காயத்தைச் சாப்பிட்டு குழந்தையின்மை குறைபாட்டில் இருந்து மீண்டவர்கள் உண்டு.

-எம்.மரிய பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர், 9551486617

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here